சென்னை: தென் மாவட்டங்களில் இன்றும் அதிகனமழை பெய்யும் என்றும், இந்த மழை நாளை காலை வரை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதுபோல பிரபல வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் நேற்று போல கனமழை பெய்யாது, ஆனால் தீவிர மழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்கடி, தென்காசி மாவட்டங்கள். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் திங்கள்கிழமை மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்றைய வானிலை அறிவிப்புகள் பொதுமக்களை மேலும் அச்சமூட்டும் வகையில் உள்ளது.
ஏற்கனவே மழை வெள்ளத்தால் தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தண்ணீரில் தத்தளித்து கண்ணீரில் மிதந்து வரும் நிலையில், இன்றும், நாளையும் மேலம கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்பட தென்மாவட்டங்களில் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி 4 மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் (17ந்தேதிஸ்ரீ இரவு முதல் தொடர்ந்த பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்கள் பேரிழப்பை எதிர்கொண்டுள்ளதுடன், சாலைகளிலும் வீடுகளிலும் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
தென் தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக, திருநெல்வேலி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை நீர் வீடுகளை சூழ்ந்து மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. ஊட்டுவாழ் மடம் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மையிலாடி-அஞ்சுகிராமம் சாலை, கோழிகோட்டு பொத்தை-தோவாளை சாலை, இறச்சகுளம்-திட்டுவிளை சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. இதனால் அந்த சாலைகள் வழியே போக்குவரத்து முடங்கியுள்ளதோடு, வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் சென்று வருகின்றனர்.
நாகர்கோவிலில் கனமழை பெய்துவரும் நிலையில் ஊட்டுவாழ்மடம், பாறைக்கால்மடம் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தேங்கிய மழை நீர் காரணமாக வீட்டில் சிக்கிய பொதுமக்களை தீயணைப்புத்துறையினர் ரப்பர் குழாய்கள் உதவியுடன் மீட்டு வருகின்றனர். மேலும் பாதுகாப்பு கருதி அங்கு மின்சாரமும் நிறுத்தப்பட்டுள்ளதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இதே போல் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வரும் கனமழையால், குற்றாலம் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அபாய அளவை தாண்டியும் வெள்ளம் பாய்ந்தோடி வருவதால், அருவியின் அருகே சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய குற்றாலத்திலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடி வரை அதிகரிக்கப்பட உள்ளதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. மேலும் நீர் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்காக அவசர கால தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தென் தமிழகத்தில் இன்றும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழையும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று போல் பெய்யாது.. ஆனால்.. இன்னும் என பயமுறுத்தி உள்ளார். இன்று தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாள் முழுவதும் கனமழை பெய்யும். மற்ற அருகிலுள்ள மாவட்டங்களான ராமநாதபுரம், கன்னியாகுமரி, தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும். நேற்று போல் மழை பெய்யாது, கூறி அச்சத்தைப் போக்கி, இன்னும் தீவிர மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று ஒரு எச்சரிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறார்.
முன்னதாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இது குறித்து அந்த மையம் சாா்பில் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், குமரிக் கடல், அதையொட்டிய பகுதியில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் செவ்வாய் முதல் சனி (டிச.19-23) வரை ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை செய்து ஆடியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், பாதுகாப்பாக இருங்கள்… உங்கள் மொபைலை சார்ஜ் செய்து கொள்ளுங்கள். 18.12.23 திங்கள் மற்றும் 19.12.23 செவ்வாய்கிழமை மின்வெட்டு இருக்கும். தயாராக இருங்கள் என கூறியுள்ளார்.