சென்னை:  கோவையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்,  கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் செம்மொழி பூங்காவிற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதுதொடர்பாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்,  மக்களுடன் முதல்வர் திட்டத்தின் பயன் மக்களைச் சென்றடைய உதவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைத்தள பதிவு மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களுக்கு நன்மையளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் இன்று (டிசம்பர் 18 ஆம் தேதி) கோவையில் முதலமைச்சர் ஸ்டாலினால்  தொடங்கி வைக்கப்பட்டது.

பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீா்வு காணும் வகையில் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவையில் திங்கள்கிழமை (டிச.18) தொடங்கிவைத்து மக்களிடம் மனுக்களை பெற்றார்.

முன்னதாக ‘மக்களுடன் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கிவைப்பதற்காக,முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் திங்கள்கிழமை காலை 9.20 மணிக்கு கோவை வ சென்றடைந்தார். பின்னர் நவஇந்தியா எஸ்.என்.ஆா். கல்லூரி அரங்கில் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தைத் தொடங்கிவைத்து மக்களிடம் மனுக்களை பெற்றார்.

அதைத்தொடர்ந்து, கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் செம்மொழி பூங்காவிற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவை வருகையையொட்டி பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

கோவை கிளம்பும் முன் முதலமைச்சர்  ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில்,  உங்களில் ஒருவனான என்னை, உங்களுக்கான ஒருவனாக உருவாக்கி முதலமைச்சர் பொறுப்பை ஏற்க வைத்தீர்கள். நமக்கு வாக்களிக்காத மாற்றுச் சிந்தனை கொண்டோரும் ‘தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே!’ என்று என்று எண்ணும் வகையிலான மக்கள் நலன் பேணும் ஆட்சியைக் கட்டமைத்து வருகிறோம்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்

விடியல் பயணம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

புதுமைப்பெண் திட்டம்

இல்லம் தேடிக் கல்வி

இன்னுயிர் காப்போம் –  நம்மைக் காக்கும் 48

நான் முதல்வன் – போன்ற நமது #DravidianModel அரசின் திட்டங்கள் அனைத்தும் உங்களை வந்து சேர்வதை உறுதிசெய்திட ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என உங்கள் மாவட்டங்களுக்கு வந்தேன்.

இதனை இன்னும் செம்மைப்படுத்திட வேண்டுமல்லவா! உங்களின் தேவைகளும் அரசின் சேவைகளும் ஒரு குடையின்கீழ் சந்தித்து விரைவில் தீர்வுகள் கிடைத்தால் அது #DravidianModel-இன் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு வைரம் என மின்னிடுமே! அப்படியான திட்டமாக உருப்பெறுகிறது #மக்களுடன்முதல்வர் திட்டம்! இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்கத் திங்களன்று கோவைக்கு வருகிறேன்… மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள், நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு இந்தத் திட்டத்தின் பயன் மக்களைச் சென்றடைய உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.