டில்லி:

சொராபுதின் என்கவுன்டர் வழக்கு நீதிபதி மர்ம மரண வழக்கில் மகாராஷ்டிரா அரசு வரும் 15ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தில் 2005ம் ஆண்டு சொராபுதின் ஷேக் உள்பட 3 பேர் போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டதாக பா.ஜ.க தலைவர் அமித், போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வந்த மும்பை சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி பி.எச்.லோயா 2014ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நாக்பூரில் மர்மமான முறையில் இறந்தார்.

அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டது. அவரது மரணத்துக்கும், சொராபுதின் வழக்குக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அவருடைய குடும்பத்தினர் 2 மாதங்களுக்கு முன்பு சந்தேகத்தை கிளப்பினர்.

நீதிபதி லோயா மரணம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, காங்கிரஸ் பிரமுகர் தெசீன் பூனவாலா, பத்திரிகையாளர் பி.ஆர்.லோன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நீதிபதி மர்ம மரணம் மிகவும் முக்கிய பிரச்சனை என்று கருத்து தெரிவித்தது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.

“நீதிபதி லோயா மர்ம மரணம் மிகவும் முக்கியமான விவகாரம். இரு தரப்பு விசாரணையும் மிகவும் முக்கியமானது. மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் 15-ம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்,” என நீதிபதிகள் தெரிவித்தனர். விசாரணை ஜனவரி 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.