சென்னை,

கோவையில் இருந்து சென்னை வந்த சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டியில் பாம்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் அலறிடியத்து ஓடினர்.

தினமும் சென்னையில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து சென்னைக்கும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து சென்னைக்கு சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.  அந்த ரெயிலின் 3 அடுக்கு ஏசி பெட்டியில் கீழே உள்ள படுக்கைக்கு கீழே பொருட்கள் வைக்கும் இடத்தில் விஷ பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது.

இதை கவனிக்காமல் பயணிகளும் அந்த பெட்டியில் ஏறி பயணித்து வந்தனர். துரதிருஷ்டவசமாக யாரையும் அந்த பாம்பு தீண்டாமல் அதுவும் பயணித்துள்ளது.

ரெயில் சென்னை வந்தபோது, பயணிகள்  படுக்கைக்கு கீழே வைத்துள்ள  பெட்டிகளை எடுக்க முயன்றபோது, அடியில் பதுங்கி இருந்த பாம்பு சீறியது.

இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு ரெயிலை விட்டு கீழே இறங்கினர். பாம்பு உடனடியாக அதே பெட்டியில் உள்ள  அடுத்த பகுதிக்குள் சென்று மறைந்துக்கொண்டது.

இதுகுறித்து உடனடியாக ரெயில் நிலையத்தில் இருந்த போலீசாரிடமும், அதிகாரிகளிடமும்  தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, ரெயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்தடைந்ததும், அனைத்து பயணிகளும் இறங்கிய பிறகு, அந்த ஏசி பெட்டியில் இருந்து பாம்பு பிடிக்கப்பட்டதாக ரெயில்வே  தெரிவித்துள்ளது.

மேலும், ரெயில் பெட்டிகளுக்குள் பாம்பு எவ்வாறு வந்தது என்பது குறித்து, சேரன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளை பராமரிக்கும் கோவை கிளையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ரெயில் பெட்டிக்குள் பாம்பு இருந்து பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ரெயில்வே நிர்வாகம் ரெயில் புறப்படும் முன்பு அனைத்து ரெயில் பெட்டிகளையும் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.