சென்னை: அரசு பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகளை தெரிந்து கொள்ள பெற்றோர்கள்   ஸ்மார்ட்போன்களை வைத்துக்கொள்ளுங்கள், இல்லாதவர்கள் குறைந்த விலை ஸ்மார்ட் போனை வாங்கிக்கொள்ளுங்கள் என பள்ளி கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் ஒன்றிணைக்கும் வகையில், அரசு பள்ளி மாணாக்கர்களின் பெற்றோர் தொலைபேசி எண்கள் வாங்கி, அதை எமிஸ் எனப்படும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன்மூலம், வரும் கல்வியாண்டு முதல், பள்ளி மாணவர்கள் வருகை பதிவேறு உள்பட அனைத்து தகவல்களையும் பெற்றோர்களுக்கு அனுப்பி வைக்க பள்ளி கல்வித்துறை வாட்ஸ் அப் குழுக்களை உருவாக்கி தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளது. இந்த புதிய நடைமுறை   ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும்  அமலுக்கு வர உள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.   இதன்மூலம் மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகள், ஒவ்வொரு மாணவ, மாணவியரின்  பெற்றோர்களுக்கு உடனுக்குடன் தகவல்களை தெரிவிப்பதற்கு கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

ஆனால், பல ஏழை பெற்றோர்களிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால், வாட்ஸ்ப் இயங்க முடியாத நிலை உள்ளது. இதனால், பெற்றோர்கள் குறைந்த விலையிலான ஸ்மார்ட் போன்களை வாங்கி வைத்துக்கொள்ள கல்வித்துறைஅறிவுறுத்தி உள்ளது.

பிள்ளைகளின் கல்வி செயல்பாடுகளை தெரிந்து கொள்ள குறைந்த விலை ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோருக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுவரை 80 லட்சத்து 30 ஆயிரம் மொபைல் எண்கள் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாத இறுதிக்குள்ளாகவே மீதம் இருக்கக்கூடிய அனைத்து பெற்றோர்களின் மொபைல் எண்களும் சரிபார்க்கப்படும் என்று தெரிவித்திருப்பதோடு ஸ்மார்ட்போன்கள் இல்லாத பெற்றோர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

ஸ்மார்ட்போன்கள் இல்லாத பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அதிகாரிகள் பல அறிவுறுத்தல்களை தெரிவித்துள்ளனர். பிள்ளைகளுடைய செயல்பாடுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காக குறைந்த விலையிலான ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும் என்ற அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.  பள்ளி திறந்ததும் பெற்றோர்களை அழைத்து பள்ளி மேலாண்மை குழு மூலமாக ஸ்மார்ட் போன் அவசியம், அதன் மூலமாக மாணவர்களுக்கு எந்த மாதிரியான தகவல்கள் கிடைக்க உள்ளது, தேவையின் முக்கியத்துவம் என்ன என்பதை எல்லாம் பள்ளி மேலாண்மை குழு மூலமாக பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே இத்தகைய புதிய திட்டம் பள்ளிக்கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது அதிகாரிகளின் நம்பிக்கையாக உள்ளது.