பெங்களூரு

த்திரிகையாளர் கௌரி லங்கேஷ் ஐ கொன்ற கொலையாளிகளின் ஓவியங்களை விசேஷ புலனாய்வுத் துறை வெளியிட்டுள்ளது.

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன் அவர் இல்லத்தின் வாசலில் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.  அவரது கொலை இந்தியா முழுவதையுமே கடும் பரபரப்பில் ஆழ்த்தியது.  இந்தக் கொலைக்கு காரணம் யார் என்பது இதுவரை தெரியவில்லை.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் விசேஷ புலனாய்வுத் துறை கொலையாளிகள் என சந்தேகப்படும் மூவரின் உருவப் படத்தை வெளியிட்டுள்ளது.  இந்த படங்கள் சிசிடிவி பதிவுகள், மற்றும் சாட்சிகளின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ளன.  இதில் இருவர் கொலையில் நேரடியாக சம்மந்தப் பட்டவர்கள் என கூறப்படுகிறது.

இது குறித்து, “கொலையைப் பார்த்த சாட்சிகளின் வாக்குமூலம், மற்றும் சிசிடிவி பதிவின் அடிப்படையில் இந்த படங்கள் வரையப்பட்டுள்ளன.  மேலும் இவர்கள் கௌரி லங்கேஷ் இருந்த அதே பகுதியில் குடி இருந்ததாக ஒரு சந்தேகமும் உள்ளது. இந்த படங்களை பார்க்கும் பொது மக்கள் இவர்களைப் பற்றி ஏதும் தகவல் தெரிந்தால் உடனடியாக எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என விசேஷ புலனாய்வுத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.  இது குறித்து தகவல் தெரிவிக்க விரும்புவோர் 9480800202 என்னும் எண்ணையோ அல்லது sit.glankesh@ksp.gov.in என்னும் ஈ மெயில் முகவரியையோ தொடர்பு கொள்ளுமாறும், வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள 9480800304 அல்லது 9480801701 என்ற எண்களைப் பயன்படுத்தலாம் எனவும் விசேஷ புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.