சிம்மக்கல் அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில்
வரலாறு
சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது இந்த பேச்சியம்மன்  திருக்கோயில். இந்த கோயிலின் தெய்வமாக இருக்கும் சக்தி தேவி பேச்சியம்மன் எனும் பெயரில் அழைக்கப்படுகிறாள். கோயிலின் தல விருட்சமாக ஆல மரம் இருக்கிறது. மிகப் பழமையான காலந்தொட்டு இந்த இடத்தில் பேச்சியம்மன் கோயில் கொண்டிருக்கிறாள் எனக் கூறுகின்றனர் பக்தர்கள். கோயிலின் அம்மன் வலது புறம் ஓங்கிய கையுடனும், இடது கையில் குழந்தையுடனும் காண்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாகும். ஆறடி உயரமுள்ள இந்த அம்மனின் விக்கிரகத்தைத் தரிசிக்கும் போது, நிஜமான ஒரு பெண் நேரில் வந்து நிற்பது போல் தோன்றுகிறது.
சிறப்புக்கள்
மதுரை மாநகரம் வழியே ஓடும் வைகை நதிக்கரையில் அமைந்திருக்கிறது இந்த பேச்சியம்மன் திருக்கோயில். இங்கு பேச்சியம்மன் சுயம்புவாக இருப்பது விசேஷ அம்சம். இந்த கோயிலில் ஒரே இடத்தில் விநாயகர், முருகன், மீனாட்சி – சுந்தரேஸ்வரர், மகாலட்சுமி, சரஸ்வதி,
தட்சிணாமூர்த்தி, காளி, துர்க்கை, தத்தாத்ரேயர், ஆஞ்சநேயர், நவகிரகங்கள், கருப்பசாமி, இருளப்பசாமி, அய்யனார், வீரமலை பெரியண்ணன், சின்னண்ணன், சப்தகன்னியர் ஆகிய தெய்வங்களை ஒரே இடத்தில் தரிசிக்கலாம். இக்கோயிலில் நவராத்திரி, சிவராத்திரி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இக்கோயிலில் வெள்ளிக்கிழமை மட்டும் அம்மனுக்குப் பாலபிஷேகம் செய்யப்படுகிறது. அத்துடன் மாலையில் குங்குமாபிஷேகம் நடக்கிறது. இதைக் காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிகின்றனர். ராகு – கேது தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகர் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் நன்மை உண்டாகும். திக்குவாய் பிரச்சனை தீர, குழந்தைகளுக்குச் சரிவரப் பேச்சு ஏற்படாத நிலை, சிறந்த பேச்சாற்றல் பெற விரும்புபவர்கள் இங்கு வந்து பேச்சியம்மனை வழிபடுவதால், அம்மனின் அருளால் மேற்கண்ட பிரச்சனைகள் நீங்கப் பெறுவார்கள்.
கோயில் அமைவிடம்
அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில் மதுரை மாவட்டத்தில் இருக்கும் சிம்மக்கல் பகுதியில் வைகை நதிக்கரையில் அமைந்துள்ளது. கோயில் நடை திறப்பு தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு பேச்சியம்மன் திருக்கோயில் பேச்சியம்மன் படித்துறை சிம்மக்கல் மதுரை மாவட்டம்  625001