ஆந்திரா: ஆந்திர மாநிலத்தில் உள்ள பெருமாள் கோவில் ஒன்றின் உண்டியலில் ரூ.1 கோடிக்கான ‘செக்’கை பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தி உள்ளார். இதைக்கண்ட அதிகாரிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், செக் கொடுத்த நபரின் வங்கிக்கணக்கில் வெறும் ரூ.17 மட்டுமே இருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தானம் தரப்பில் வழக்கு தொடர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்மாசலம் பெருமாள் கோவில்,  இந்தியாவின் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு அருகில் கடற்கரையோரம் ரத்னகிரி மலையின் வனப்பகுதிக்கு நடுவில் அமைந்துள்ளது ஸ்ரீ வராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்.. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.  பிரகலாதனின் அழைப்பை ஏற்று தூணை பிளந்து வந்த நரசிம்ம சுவாமி இரண்யகசிபுவை கொன்ற பின்பு அமைதி அடைந்து கோயில் கொண்ட தலம் சிம்மாசலம்.

இங்குள்ள நரசிம்ம சுவாமி சுயம்பு வடிவம் ஆனதால், ஆண்டு முழுவதும் சந்தனக் காப்புடன் மட்டுமே காட்சி தருவாா். அட்சிய திருதியை தினத்தில் மட்டுமே சந்தன காப்பு களையப்பட்டு சுவாமியின் விசுவரூப தரிசனம் பக்தா்களுக்கு கிடைக்கும். அதை சந்தனோற்சவம் என்ற பெயரில் கோயில் நிா்வாகம் உற்சவமாக நடத்தி வருகிறது. சிம்மாசல மலைமேல் அமைந்துள்ள இக்கோயிலுக்கு சா்வதேச அங்கீகாரம் (ஐஎஸ்ஓ 9001:2005) கிடைத்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், தரிசன ஏற்பாடுகள், சுத்தம் சுகாதாரம் பேணுதல், பசுமையை பாதுகாத்தல் உள்ளிட்ட பல அம்சங்களின் கீழ் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலுக்கு பக்தர் ஒருவர் ரூ.1 கோடிக்கான காசோலையை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளார்.  இதைக்கண்ட அதிகாரிகள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இருந்தாலும் சிறு சந்தேகமும் ஏற்பட்டது. இதையடுத்து  கோயில் அதிகாரிகள்  அந்த காசோலையை அவசர அவசரமாக  வங்கிக்கு அனுப்பினர். ஆனால், எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. காசோலை திரும்பி வந்தது. அந்த காசோலை வழங்கிய நபரின் வங்கிக்கணக்கில் வெறும் ரூ.17 மட்டுமே இருந்தது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், ரூ.1 கோடி செக் கொடுத்த  நன்கொடையாளரை அடையாளம் காண முயற்சி எடுத்து வருகின்றனர். அந்த நன்கொடையாளர் விவரம் குறித்து  வங்கிக்கு கடிதம் எழுத உள்ள  தேவஸ்தானம்  தெரிவித்து உள்ளது. இந்த ரூ.1 கோடிக்கான செக்  வழங்கியது தொடர்பாக,  தவறான நோக்கம் கண்டறியப்பட்டால், அந்த நபர்,  காசோலை பவுன்ஸ் வழக்கை எதிர்கொள்ளக்கூடும். சாதனை நன்கொடையாகத் தோன்றிய இந்த நன்கொடை அதிர்ச்சிகரமான திருப்பத்தை எடுத்தி உள்ளது.

கோவிலுக்கும், அதிகாரிகளுக்கும் அல்வா கொடுத்த நபரை தேடி வருகின்றனர்.