சென்னை: அரசை விமர்சிப்பவர்களைக் சர்வாதிகார வழிகளில் அடக்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது என சுற்றுச்சூழல் ஆர்வலர்  திஷா ரவி கைது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டிவிட்பதிவிட்டுள்ளார்.

மோடி அரசு அமல்படுத்தி உள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, விவசாயிகள் குடியரசு தினத்தில் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. காலிஸ்தான் ஆதரவாளர்களால்தான் இந்த வன்முறை தூண்டப்பட்டதாக டெல்லி போலீஸார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கிரேட்டடா தன்பெர்ஜ், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்த டிவிட் வைரலானது.  கிரெட்டா தன்பெர்க்கின் வாசகங்களைக்கொண்ட   ‘டூல்கிட்’டை சுற்றுச்சூழல் ஆர்வலரான திஷா ரவி  என்ற மாணவி ஆதாரமாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து திஷா ரவியை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.

திஷா ரவி கைது செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில்,  திஷா ரவி கைது குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  காட்டசாட்டமாக டிவிட் பதிவிட்டுள்ளார்.  இதுகுறித்து மு.க.ஸ்டாலின், தனது டிவிட்டர் பக்கத்தில்,

“அற்பமான குற்றச்சாட்டுகளைப் புனைந்து திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. அரசை விமர்சிப்பவர்களைக் கொடுங்கோல் வழிகளில் அடக்குவது சட்டத்தின் ஆட்சி ஆகாது. இத்தகைய தண்டிக்கும் போக்கைத் தவிர்த்து, இளைஞர்களிடம் இருந்து எழும் எதிர்ப்புக் குரல்களுக்குச் செவிமடுக்க வேண்டும் என்று பாஜக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.