சித்திப்பேட்டை

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை நகர நகராட்சி அங்குள்ள தெரு நாய்களை கொன்று குப்பை மேட்டில் புதைத்துள்ளது.

விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் பிரிவு 11(1)சி யின் படி தெரு நாய்கள் உள்ளிட்ட, எந்த ஒரு விலங்கையும் விஷ ஊசி, விஷம் கலந்த உணவு உள்ளிட்ட எதைக் கொண்டும் கொல்வது குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு செய்வோருக்கு இரண்டு வருட கடுங்காவல் தண்டன, அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படாலம் என அந்த சட்டப்பிரிவு தெரிவிக்கிறது.   ஆனால் இத்தகைய குற்றங்களை நகராட்சி நிர்வாகங்களே செய்து வருகின்றன.

தெலுங்கானா மாநிலத்தில் சித்திப்பேட்டை நகரின் பல பகுதிகளில் தெரு நாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ளதாக புகார்கள் வந்தன.   இதனால் அந்த நாய்களுக்கு விஷம் கலந்த உணவு அளிக்கப்பட்டு கொல்லப்பட்டன.   அவைகளில் 40 நாய்களின் உடலை ஒரு வண்டியில் அள்ளிச் சென்றுள்ளனர்.  இதனால் கொதித்து போன மிருக ஆர்வலர்கள் அவர்களை தடுத்துள்ளனர்.

அங்கு கூடி இருந்தவர்களில் வித்யா என்னும் ஒரு பெண் தான் தினமும் உணவு அளித்து வரும் மூன்று நாய்களும் இறந்து இருப்பதைக் கண்டு கதறி உள்ளார்.    ஆர்வலர்கள் தடுத்த போது ஊழியர்கள் தாம் தினசரி கூலி வேலை செய்பவர்கள் எனவும் நகராட்சி சொல்வதை தாங்கள் கேட்டாக வேண்டும் எனவும் கூறி உள்ளனர்.

இது குறித்து வித்யா, “நான் உணவிட்டு வந்த மூன்று நாய்கள் உள்ளிட்ட 40 நாய்களை கொன்று உடல்களை எடுத்துச் சென்றுள்ளனர்.  நாங்கள் தடுத்தும் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.   அவர்கள் நகராட்சி ஊழியர் சீருடை அணிந்திருக்கவில்லை.   அவர்கள் ஒப்பந்த கூலியாட்கள் என தெரிய வந்துள்ளது.” என கண்ணீருடன் கூறி உள்ளார்.

அதே நேரத்தில் வேறொரு இடத்தில் குப்பை மேட்டில் 38 நாய்களின் உடல்கள் கிடந்துள்ளன.  அவற்றையும் எடுத்துச் சென்று குப்பை மேட்டில் ஊழியர்கள் புதைத்துள்ளனர்.   சமூக ஆர்வலர்களின் போராட்டத்துக்கு  பிறகு இந்த நய்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.   ஆர்வலர்கள் சித்திப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அத்துடன் இது குறித்த புகார் ஒன்றை சித்திப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்கும் அளித்துள்ளனர்.   ஆட்சியர் இந்த பணியில் ஈடுபட்ட 4 நகராட்சி தொழிலாளர்களை பணி இடை நீக்கம் செய்துள்ளார்.  அத்துடன் இந்த சம்பவம் குறித்து விசாரிக்குமாறு மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.