போபால்,

 

மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், வருவாய் துறை கோப்புகள் தொடர்பான வழக்கமான பணிகளை முடிப்பதில் தாமதம் செய்யும் அதிகாரிகள் தலை கீழாக தொங்கவிடப்படுவார்கள் என கூறியுள்ளார்.

 

பாரதீய ஜனதா கட்சியின் மாநில உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்றது.  இதில் கலந்துக் கொண்டு உரையாற்றிய சிவராஜ் சிங் சவுகான், இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து உள்ளார்.  மத்தியபிரதேச மாநிலத்தில்,  பண்டல்காந்த் பகுதியச் சேர்ந்த பா ஜ க  நிர்வாகி  ஒருவர், நீண்ட காலமாக வருவாய் துறை தொடர்பான கோப்புகள் நிலுவையில் உள்ளதாக புகார் தெரிவித்தார்.  இந்த விவகாரத்தில் கால தாமதம் ஆவதை தடுக்க முதல்வர்  சவுகான் தலையிட வேண்டும் எனக் கோரிக்கையும் விடுத்தார்.  இதுபோன்ற கடும் வார்த்தைகளை  உயர் அதிகாரிகளை மிரட்ட சவுகான் பயன்படுத்தியதை காங்கிரஸ் கண்டித்து உள்ளது.

 

இது பற்றி, பா ஜ க வின் செய்தித் தொடர்பாளர் ராஜ்நிஷ் அகர்வால் பேசுகையில், “விவசாயிகள் பிரச்சனைகளை தீர்ப்பதில் முதல்-மந்திரி தீவிரமாக உள்ளார்.  அதனால்தான் விவசாயிகளின் வருவாய் தொடர்பான கோப்புகளை நீண்ட காலமாக நிலுவையில் வைக்கும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேசினார்,” என்றார்.  இதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும் மத்திய பிரதேச மாநில பா.ஜ. அரசு தன்னுடைய தோல்வியின்ல் உண்டாகும் கோபத்தை, அதிகாரிகள் பக்கம் திருப்புகிறது என்றும்  முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் பேச்சு அவருடைய விரக்தியைத்தான் காட்டுகிறது  என காங்கிரஸ் கூறி உள்ளது.

”வருவாய் மற்றும் விவசாய துறையில் பெரும் ஊழல்கள் நடந்துள்ளன.    அனைத்து விவசாயிகளும் பாரதீய ஜனதாவின் தவறான கொள்கையினால் கடும் பாதிப்பில் உள்ளனர்.  இதற்கு முழுக்காரணம் முதல்வர் சவுகாந்தான்   அதனால்தான் தன்னுடைய பொறுப்பில் இருந்து தப்பிப்பதற்காக  அதிகாரிகள் மீது சவுகான் பழிபோடுகிறார்”  என  காங்கிரஸ் கட்சியின் ம. பி. மாநில தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கருத்து தெரிவித்தார்..

தவிர. மத்திய பிரதேச அரசு  அதிகாரிகள் முதல்வர் சவுகானுடன் இணைந்து கடந்த 11 ஆண்டுகளாக பணியாற்றி உள்ளனர்,  ஆனால் இப்போது முதல்-மந்திரி தன்னுடைய தோல்விக்குப் பொறுப்பேற்காமல் திடீரென அதிகாரிகளை சாடுகிறார் என காங்கிரஸ் கூறிஉள்ளது.