சென்னை

மிழக அரசின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, மே 7-ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்று முதல் மாநில தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார்.

சுமார் இரண்டு ஆண்டுகள் வெ.இறையன்பு தலைமைச் செயலராகப் பணியாற்றிய நிலையில் நாளை அவர் ஒய்வு பெறுகிறார். எனவே தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த உத்தரவை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்து உள்ளார். தமிழகத்தின் 49வது தலைமைச்செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டு உள்ளார்.

சிவ்தாஸ் மீனா ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார்.  இவர் 1964ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5ஆம் தேதி பிறந்தவர். ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பொறியியல் கல்லூரியில் கட்டுமான பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.

பிறகு ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிவ்தாஸ் மீனா ராஜஸ்தானி, தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பானிய மொழிகளை கற்றுள்ளார். 1989ஆம் ஆண்டு ஐஏஏஸ் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு கேடரில் ஐஏஎஸ் அதிகாரியாக சிவ்தாஸ் மீனா பணியில் சேர்ந்தார்.

இவர் ஊரக வளர்ச்சித் துறை, நில நிர்வாகத் துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். மேலும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர் உள்பட பல முக்கிய பதவிகளை சிவ்தாஸ் மீனா வகித்துள்ளார்.

சுமார் 30 ஆண்டுகள் ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்டவர். இவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 4 தனிச் செயலாளர்களில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தற்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.