மும்பை

தேசியவாத காங்கிரஸில் இன்னும் அஜித்பவார் இருப்பதால் கட்சி உடையவில்லை என சரத்பவார் கூறி உள்ளார்.

மகாராஷ்டிராவில் சிவசேனா, பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வந்தநிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த மாதம் 2-ந் தேதி தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சரத்பவாரின் அண்ணன் மகனுமான அஜித்பவார் தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்தார்.

தொடர்ந்து அஜித்பவார் துணை முதல்வராகவும், சகன் புஜ்பால், ஹசன் முஷ்ரிப், தனஞ்செய் முண்டே, அதீதி தட்காரே உள்ளிட்ட மூத்த தலைவர்கள், அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இதனால் தேசியவாத காங்கிரஸ் சரத்பவார், அஜித்பவார் தலைமையில் 2 ஆக உடைந்தது.

இந்த 2 பேரும் போட்டி கூட்டங்களை நடத்தினர். அஜித் பவாருக்கு பெரும்பாலான சட்டமன்ற  உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆதரவாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் புனேயில் சரத்பவார், அஜித்பவார் ரகசியமாகச் சந்தித்துப் பேசியது மீண்டும்  மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சரத்பவார் அவரது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

தேசியவாத காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர். சுப்ரியா சுலே, “அஜித்பவார் எங்கள் கட்சியின் மூத்த தலைவர். சட்டமன்ற உறுப்பினர்.. தற்போது அவர் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து உள்ளார். இது தொடர்பாகச் சபாநாயகரிடம் புகார் அளித்து உள்ளோம். அவரின் பதிலுக்காகக் காத்து இருக்கிறோம் தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்படவில்லை” எனத் தெரிவித்து இருந்தார்.

சுப்ரியா சுலே கூறியது தொடர்பாக பாராமதியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,

”எங்கள் கட்சி உடைந்தது என்ற கேள்விக்கே இடமில்லை. அஜித் பவார் இன்னும் தேசியவாத காங்கிரஸில் தான் உள்ளார். எனக்கு அஜித்பவார் தலைவர் என நான் கூறவில்லை. அவர் இளையவர் என்பதால் சுப்ரியா சூலே அஜித்பவாரை தலைவர் எனக் கூறிக்கொள்ளலாம். இதற்கெல்லாம் அரசியல் அர்த்தம் தேடவேண்டியதில்லை”

என்று தெரிவித்துள்ளார்.