டாக்கா:
கிரிக்கெட் போட்டியின்போது ஸ்டம்பை உதைத்து மோசமாக நடந்துகொண்ட பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு மூன்று போட்டிக்களில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் டாக்கா பிரீமியர் லீக் (டிபிஎல்) போட்டி நடந்து வருகிறது. இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள முகமதியன் ஸ்போர்ட்டிங் கிளப் அணியின் கேப்டனாக, ஷகிப் அல் ஹசன் இருக்கிறார். இந்த அணிக்கும் அபாஹனி லிமிடெட் அணிக்கும் சமீபத்தில் நடந்த போட்டியில், எல்பிடள்யூ கேட்டு நடுவரிடம் முறையிட்டார் ஷகிப்.

அப்போது அவர் தரமறுத்ததால் ஸ்டம்பை, ஷகிப் ஹல் ஹசன் ஓங்கி உதைத்தார். மற்றொரு முறை நடுவர் மீதுள்ள கோபத்தால், ஸ்டம்பை பிடுங்கி எறிந்தார். இது சக வீரர்களுக்கும் நடுவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பின்னர் தனது செயலுக்கு ஷகிப் மன்னிப்பு கோரினார்.

இதையடுத்து அவருக்கு மூன்று போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதோடு 5800 அமெரிக்க டாலர் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்நிலையில், நடுவர் ஒரு தலைபட்சமாக நடந்துகொண்டதாக கூறப்பட்ட புகாரை அடுத்து அதுபற்றி விசாரிக்க, பங்களாதேஷ் கிரிக்கெட் போர்டு கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.