எட்க்பாஸ்டன்:
ங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை, 22 வருடத்துக்குப் பிறகு அதன் சொந்த மண்ணில் வென்று நியூசிலாந்து அணி சாதித்துள்ளது.

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2 வது டெஸ்ட் தொடர், பர்மிங்காமில் தொடங்கி நடந்து வந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 388 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டிவோன் கான்வே 80 ரன்களும் வில் யங் 82 ரன்களும் அனுபவ வீரர் ராஸ் டெய்லர் 80 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 85 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளும் மார்க் வுட், அலி ஸ்டோன் தலா 2 விக்கெட்டுகளும் டேன் லாரன்ஸ், ஆண்டர்சன் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, நியூசிலாந்து வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து அணி.

நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியதுமே இங்கிலாந்து 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது. நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, நீல் வாக்னர் தலா 3 விக்கெட்டும் போல்ட், அஜாஸ் பட்டேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 38 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதை 10.5 ஓவரில், 2 விக்கெட் இழந்து எட்டிய நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மண்ணில் 1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்று நியூசிலாந்து சாதித்துள்ளது. மேட் ஹென்றி ஆட்ட நாயகன் விருதையும், முதல் டெஸ்டின் இரட்டைச் சதம் விளாசிய டிவோன் கான்வே தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

இந்த அசத்தல் வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது, நியூசிலாந்து. இரு அணிகளும் வரும் 18 ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.