புதுடெல்லி:

தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த 4 ராஜ்யசபை எம்பிக்கள், பாஜகவில் இணைந்தனர்.


தெலுங்கு தேச  எம்பிக்களான ஒய்எஸ்.சவுத்ரி, டிஜி. வெங்கடேஷ், சிஎம். ரமேஷ் மற்றும் ஜிஎம். ராவ் ஆகியோர், பாஜகவுடன் இணைய முடிவு செய்துள்ளதாக தீர்மானம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த தீர்மானத்தை ராஜ்யசபை தலைவர் வெங்கய்யநாயுடுவிடம் அளித்தனர்.

4 தெலுங்கு தேச ராஜய்சபை எம்பிக்களின் முடிவை,பாஜக  செயல் தலைவர் ஜேபி.நட்டா வரவேற்றுள்ளார்.  இதனை பாஜக ஏற்றுக்கொண்டுள்ளதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

பாஜக செயல் தலைவர் நட்டா முன்பு இணைந்தபின் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓய்எஸ்.சவுத்ரி, நாட்டின் வளர்ச்சிக்கு எங்களின் பங்களிப்பு இருக்கும் வகையில் பாஜகவுடன் சேரும் முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.

இது குறித்து தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறும்போது, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்றும் மாநில நலனுக்காக மட்டுமே பாஜகவுடன் நாங்கள் போராடி வந்தோம்.

சிறப்பு அந்தஸ்து கொடுக்காததால், மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினோம். தெலுங்கு தேச கட்சியை பலவீனப்படுத்த பாஜக முயற்சிப்பதை கண்டிக்கிறோம்.

இது போன்ற பிரச்சினைகள் தெலுங்கு தேசம் கட்சிக்கு புதிதல்ல. கட்சி தலைவர்களும் தொண்டர்களும் இதற்காக உணர்ச்சிவசப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 தொகுதிகளில் வென்று படுதோல்வி அடைந்தது. ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.

மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிளில் தெலுங்குதேசம் கட்சி வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்நிலையில், 4 தெலுங்குதேச ராஜ்யசபை எம்பிக்கள் பாஜகவில் சேர முடிவு செய்தது தெலுங்குதேசம் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.