மும்பை

மாலேகான் குண்டு வழக்கு விசாரணையில் வாரம் ஒரு முறை ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரிய சாத்வி பிரக்ஞா தாகுர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மாலேகான் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாத்வி பிரக்ஞா தாகுர் சிறையில் அடைக்கப்பட்டார்.  உடல்நிலை காரணமாக ஜாமீனில் வெளி வந்த அவரை  மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதி தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளித்தது.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட  காங்கிரஸ் கட்சியின் திக் விஜய் சிங்கை சாத்வி தோற்கடித்தார்.   தற்போது அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.    மாலேகான் வழக்கு தேசிய புலனாய்வுத் துறை சிறப்பு நீதிமன்றத்தில் இன்னும் நடந்து வருகிறது.

அந்த வழக்கில் தொடர்புள்ள அனைவரும் விசாரணையின் போது வாரம் ஒரு முறையாவது ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   சாத்வி தாம் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் என்பதால் தினமும் மக்களவை கூட்டத்தில் பங்கு கொள்ள வேண்டி இருப்பதால் தமக்கு விலக்கு அளிக்க மனு செய்தார்.

அந்த மனுவை இன்று நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.   அப்போது நீதிமன்றம், “சாத்வி பிரக்ஞா தாகுரை நீதிமன்றம் குறைந்தது வாரம் ஒரு முறை மட்டுமே ஆஜராக வேண்டும் என கூறி உள்ளது.  தினசரி ஆஜராக சொல்லவில்லை.  எனவே அவர் அவசியம் ஆஜாராக வேண்டும்” என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.