கோபிச்செட்டிப்பாளையம்: பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்கள், அவர்கள் தேர்வெழுதுவதற்கு தேர்ந்தெடுக்கும் பாடத்தாள்களின் அடிப்படையில் தனித்தனி சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

இதற்கு முன்னதாக, பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்கள், தங்கள் விருப்பப்படி 5 அல்லது 6 தாள்களை எழுதலாம் என்று மாநில அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

கோபி கலை அறிவியல் கல்லூரியில் விண்வெளி விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்த அமைச்சர், இஸ்ரோ விண்வெளி அறிவியல் கண்காட்சியிலும் கலந்துகொண்டார்.

பன்னிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்கள் 5 பாடங்களைத் தேர்வுசெய்தால், மதிப்பெண்கள் 500க்கும், 6 பாடங்களைத் தேர்வுசெய்தால் மதிப்பெண்கள் 600க்கும் கணக்கிடப்படும். எனவே, இந்த வகைப்பாட்டிற்கு ஏற்ப தனித்தனி சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார் அமைச்சர்.

அரசுப் பள்ளிகளில் மாணாக்கர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வகையில், மொத்தம் 1000 அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும், டிசம்பர் முதல் வாரத்தில் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் கூறினார் அமைச்சர் செ‍ங்கோட்டையன்.