டில்லி:

17வது மக்களவைக்கான தேர்தல் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்த எக்சிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

எக்சிஸ் போல் முடிவில் பாஜகவே வெற்றிபெற்று  மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வரும் நிலையில், இன்றைய பக்கு வர்த்தகம் ஆயிரம் புள்ளிகளை தாண்டி கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

பங்கு வர்த்தகம் இன்று காலை முதலே விறுவிறுப்பாக தொடங்கியது.  சென்செக்ஸ் 900.32 அல்லது 2.37% அதிகரித்து, 38,831.09 புள்ளிகளில் வர்த்தகமானது. நிஃப்டி 244.75 புள்ளிகள் அல்லது 2.15% உயர்ந்து, 11,651.9 புள்ளிகளில் வர்த்தகமானது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73 பைசா அதிகரித்து, ரூ.69.49 என்ற அளவில் இருந்தது.

பி.எஸ்.இயில் மொத்தமுள்ள 1872 பங்குகளில் 1,478 பங்குகள் ஏற்றம் கண்டன. 319 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 75 பங்குகள் எந்தவித மாற்றமும் அடையவில்லை.

முற்பகல் 11.57 மணிக்கு சென்செக்ஸ் 1,031.59 புள்ளிகள் அல்லது 2.72% அதிகரித்து, 38,962.36 புள்ளிகளில் வர்த்தகமானது.

மதிய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1090 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகம் ஆனது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 320 புள்ளிகள் உயர்ந்தது. முன்னணி நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.

பங்குச்சந்தைகளில் ஒரே நிமிடத்தில் ரூ. 3. 2 லட்சம் கோடி அளவிற்கு முதலீடு அதிகரித்து உள்ளது. . இதனால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.