லக்னோ:

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு எதிர்ப்பாகவும் பேசி வந்த உ.பி. பாஜக அமைச்சரவையை சேர்ந்த ஓம்பிரகாஷ் ராஜ்பர் அதிரடியாக  அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாநில ஆளுநர் அவரை நீக்கி உத்தரவிட்டு உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. பாஜகவின் கூட்டணி கட்சியான  சுகல்தேவ் பாரதிய சமாஜ் வாதி  கட்சித் தலைவருக்கும் உ.பி. அமைச்சரவையும் பொறுப்பு வழங்கப்பட்டது.

சுகல்தேவ் பாரதிய சமாஜ்வாதி கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பர் யோகி அமைச்சரவை யில்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோடி அரசு மீது ரஃபேல் போர்விமான ஒப்பந்த முறைகேடு தொடர்பாக பல்வேறு புகார்களை எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில், சுகல்தேவ் பாரதிய சமாஜ்வாதி கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பரும், மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார். இதன் காரணமாக இரு கட்சிகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில், நேற்றுடன் லோக்சபா தேர்தல் முடிவடைந்ததும், உ.,பி அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை பதவியிலிருந்து நீக்கும்படி,  ஆளுநர் ராம் நாயக்குக்கு  முதல்வர் யோகி ஆதித்யநாத் கடிதம் அனுப்பினர். அதை ஏற்று ஆளுநர் ராம்நாயக்  அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பரை, பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிகழ்வு உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.