டில்லி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ கே ஆண்டனி தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மூத்த காங்கிரஸ் தலைவரான ஏ கே ஆண்டனிக்கு தற்போது 81 வயதாகிறது.  கடந்த 52 ஆண்டுகளாக இவர் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற பணிகளில் உள்ளார்.  கடந்த 1970 ஆம் வருடம் இவருடைய அரசியல் பயணம் கேரளாவில் மாணவர் காங்கிரஸ் தலைவர் பதவியுடன் தொடங்கியது.   இவர் மூன்று முறை கேரள முதல்வராக இருந்துள்ளார்.

அப்போது இவர் மிகவும் வயதில் இளைய முதல்வராக இருந்தவர் என்னும் பெருமையை பெற்றுள்ளார்.   இவர் 10 வருடங்கள் மண்டல காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்துள்ளார்.  தவிர மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் 5 முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

கடந்த வருடம் நடந்த கேரள சட்டப்பேரவை தேர்தலின் போது அந்தோணிக்கு தேர்தல் அரசியலில் இருந்து விலகும் எண்ணம் எழுந்தது.    தற்போது அதைச் செயல் படுத்த ஆண்டனி முடிவு எடுத்துள்ளார்.  இவருடைய ,மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

அத்துடன் தமது தேர்தல் அரசியல் பயணம்,  நாடாளுமன்றம், டில்லி ஆகியவற்றுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாக ஏ கே ஆண்டனி அறிவித்துள்ளார்.   ஏற்கான்வே இவர் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் தாம் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.