டெல்லி: உ.பி. உள்பட வாக்குபதிவு நடைபெற்ற 5 மாநிலங்கள் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்ப்பு நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற ஆயுட் காலம் முடிவடைவதையொட்டி, இந்திய தேர்தல் ஆணையம்  கடந்த ஜனவரி மாதம் தேர்தல் தேதிகளை அறிவித்தது. அதன்படி  வாக்குப்பதிவு பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27, மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. அதையடுத்து,  பிப்ரவரி 14ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், பிப்ரவரி 20ஆம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், பிப்ரவரி 23ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவும், பிப்ரவரி 27ஆம் தேதி ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவும், மார்ச் 3ஆம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், மார்ச் 7ஆம் தேதி ஏழாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றது.

இதையடுத்து பாதுகாப்பாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை (மார்ச் 10ந்தேதி) வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளுடன் வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளியில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கான நடவக்டிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை காலை 8மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மண்டலம் வாரியாக எண்ணப்படும்.  காலை 9 மணி முதலே வேட்பாளர்கள் முன்னிலை குறித்த விவரங்கள் வெளிவரத் தொடங்கி விடும். பெரும் பாலான தொகுதிகளில் முடிவுகள் மதியத்துக்குள் தெரிய வாய்ப்பு உள்ளதாகவும், மாலைக்குள் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிய வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறத.

இதனிடையே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டி உள்ளார். வேட்பாளர்களுக்கு தெரியாமல் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது ர் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.