சென்னை: கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட மழை  வெள்ளத்தில் மிதந்த செம்மஞ்சேரி காவல்நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் தங்களுக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

சென்னையில் கடந்த ஒரு வாரமாக கொட்டிய மழைக்கு பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மூழ்கி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில், பழைய மகாலிபுரம் சாலையில் அமைந்துள்ள செம்மஞ்சேரி பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஆயிரக்கணக்கான குடிசை வாரிய குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்த நிலையில், அங்கிருந்து காவல்நிலையத்திற்குள்ளும் தண்ணீர் புகுந்து ஆவணங்கள் சேதமடைந்தது.

இதையடுத்து,  பொதுமக்கள் வசதிக்காக, செம்மஞ்சேரி காவல் நிலையம் பொதுமக்கள் வசதிக்காக தற்காலிகமாக இடமாற்றம்  செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளத.  இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சென்னை, J-10 செம்மஞ்சேரி காவல் நிலையம் பொதுமக்கள் வசதிக்காக தற்காலிகமாக சோழிங்கநல்லூர் – மேடவாக்கம் சாலை, முகமது சதக் கல்லூரிக்கு எதிர்புறம், எண்.14/17, முதல் தளம் என்ற முகவரிக்கு மாற்றப்பட்டு இயங்கிவருகிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். பொதுமக்கள் அவசர உதவிக்கு J-10 செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு.சீனிவாசன், கைபேசி எண் 94438-08523 மற்றும் செம்மஞ்சேரி காவல் நிலைய கைபேசி எண் – 94981 00172 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மஞ்சேரி – ஒரு பார்வை

கடந்த 2004ம் ஆண்டு சென்னையில் பேரழிவை ஏற்படுத்திய போது, சென்னையில் கடுமையான பாதிப்புக்கு உள்ளான சாலையோர மக்கள், குடிசை வாசிகள், அடையாறு, கூவம் ஆறுகளின் கரையோரம் வசித்தவர்களுக்கு, புறநகர் பகுதியான செம்மஞ்சேரியில்  குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.

இந்த வீடுகள் கட்டப்பட்ட பகுதி ஏரி என்றும், வயல் வெளி என்றும், மழை நீர் தேங்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டிய நிலையிலும், அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான தமிழகஅரசு அதை கண்டுகொள்ளாமல், சுமார் பல அடுக்கு கொண்ட ஆயிரக்கணக்கான அடுக்குமாடி வீடுகளை கட்டியது, சென்னையில் இருந்து ஏழை மக்களை அங்கு அழைத்துச் சென்று குடியமர்த்தியது.  இங்கு சுமார்   6800 வீடுகளில், 10ஆயிரத்துக்கும் அதிமான ஏழை மக்கள் வசித்து வருகின்றனர்.

பின்னர் 2010ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, “புதுப்பேட்டை கூவம் நதிக்கரை ஓரத்தில் லாங்ஸ் கார்டன் பகுதியில் வசித்து வந்த 1,028 குடிசைகள் அப்புறப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு ஒக்கியம் துரைப்பாக்கத்தில் (செம்மஞ்சேரி)  மாற்று இடம் வழங்கப்பட்டு, செம்மசேரி குடியிப்புகள் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டது.

கூவம் கரையில் இருந்த லாங்ஸ் கார்டன் பகுதியில், 1 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் பூங்காவை அமைத்து, அதை அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கியது.

மொத்ததில் சென்னை நகரின் மய்யப் பகுதிகளில் இருந்த 64 சேரிகளை (குடிசைப் பகுதிகளை) இடித்துத் தள்ளி, அங்கு வாழ்ந்து வந்த நகர்ப்புற கூலிகளான இம்மண்ணின் பூர்வகுடி மக்களை இந்த கண்ணகி நகரில்தான் அடைத்து வைத்துள்ளனர்  அரசியல்வாதிகளும், அதிகாரிகளும். ஆனால், அங்கு அனுப்பப்பட்டுள்ள மக்களின் மறுவாழ்வுக்கு எத்தனை கோடிகள் ஒதுக்கியது, அவர்களின் வாழ்வாதாரத்துக்கு என்ன வசதி செய்து கொடுத்தது என்றால்…. அது கேள்விக்குறியாகவே தொடர்கிறது. 

இதனால் சென்னையில் வசித்து வந்த பல ஆயிரம் தினசரி கூலிகள், சென்னையில் இருந்து சுமார் 20கிலோ மீட்டர் தூரத்தில் குடியமர்த்தப் பட்டதால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. மேலும், இந்த குடியிருப்பு பகுதிகள் நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து, முறையான மழை நீர் வடிகால் வசதி இல்லாததாலும் தண்ணீர் வெளியேற வழியின்றியும் கட்டப்பட்டு உள்ளதால், சாதாரண மழை முதல் பருவமழை காலத்தில் மழை வெள்ளம் தேங்கி,  செம்மஞ்சேரி மக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக அங்கு வசிக்கும் மக்கள், இதற்குதீர்வு காண ஆட்சியாளர்களை கேட்டும், இதுவரை அவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கவில்லை. இந்த நிலையில், தற்போது பெய்த கனமழையால் அங்குள்ள குடியிருப்புகளின் தரைதளத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றன. தரை தளத்தில் தண்ணீர் மத்தியில் இருக்க முடியாமல் மக்கள் வீட்டிற்கு வெளியே நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாம்பு, விஷ பூச்சிகள் நுழைந்து விடுமோ என்ற அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வீட்டில் இருந்த டிவி, பிரிட்ஜ் போனற் எலக்ட்டிரானிக் பொருட்கள், உடைமைகள் சேதம் அடைந்துள்ளன. மழை நீரில் நனைந்து உணவுப் பொருட்கள் வீணாகி விட்டன. மின்சாரம், குடிநீர், உணவின்றி மக்கள் தவித்து வருகின்றனர். காவல்நிலையம்,  ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம், பணிமனை என அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

தற்போது ஜேஜிபி மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியை அரசு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், காவல்நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எங்களுக்கு எப்போதுவிடிவு காலம் பிறகும் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பருவ மழை காலங்களில் வெள்ளத்தால் தவறாமல் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்றாக சென்னையை அடுத்த செம்மஞ்சேரி உள்ளது. மற்ற பகுதிகளில் ஒரு சில நாட்களில் வெள்ளம் வடிந்தாலும் இங்கு மட்டும் விரைவில் தண்ணீர் வடிவதில்லை. அதுபோல செம்மஞ்சேரி காவல் நிலையமும் ஏரியில் கட்டப்பட்டு உள்ளதாக வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.