சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள,  சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்  செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.  இன்று மாலை பொறுப்பேற்கிறார்.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலித் சமூகத்தைச்சேர்ந்த ஒருவர் சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர் கே.எஸ்.அழகிரியின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில், அவரை மாற்றி விட்டு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என கடந்த இரு ஆண்டுகளாக தகவல்கள் பரவி வந்தன. அதன்படி தலைவர் பதவிக்கு பலர் போட்டியில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது திடீரென மாற்றப்பட்டு செல்வ பெருந்தகையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவித்தது. இதையடுத்து அவர் இன்று மாலை சென்னை சத்திய மூர்த்தி பவனில் மாநில தலைவராக பொறுப்பேற்கிறார்.

செல்வபெருந்தகை யார்?

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வபெருந்தகை, தற்போது, தமிழ்நாடு எம்எல்ஏவாகவும், , சட்டசபை காங்கிரஸ் குழு தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே, பூஜை ஜெகனின்  புரட்சி பாரதம்,  டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள்,  மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளில் பயணித்து, இறுதியில்  காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடர்கிறார். கடந்த 13 ஆண்டுகளாக தமிழ்நாடு காங்கிரஸில் தொடர்ந்து பயணிக்கிறார். தற்போது ஶ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார் செல்வப் பெருந்தகை.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக 45 ஆண்டுகளுக்குப் பின்னர் தலித் சமூகத்தைச் சேர்ந்த செல்வப் பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே 1979-80 காலகட்டத்தில் முதுபெரும் தலித் தலைவரான இளையபெருமாள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பதவி வகித்தார். அதன்பிறகு, சுமார் 45 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தலித் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமினம் செய்யப்பட்டு உள்ளார்.

செல்வபெருந்தகை எம்எல்ஏ இன்று மாநில காங்கிரஸ் கமிட்டி  தலைவராக பொறுப்பேற்பது தொடர்பாக   தமிழக காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் டாக்டர் அஜோய்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்த திரு. கே.எஸ். அழகிரி அவர்களிடமிருந்து புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் 21.2.2024 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பொறுப்பினை ஏற்றுக் கொள்வார்.

இந்த  நிகழ்வில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம், எம்.பி., டாக்டர் ஏ. செல்லக்குமார், எம்.பி., திரு. பி. மாணிக்கம் தாகூர், எம்.பி., தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு. கே.வீ. தங்கபாலு, திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன், எம்.எல்.ஏ., திரு. சு. திருநாவுக்கரசர், எம்.பி., திரு. குமரி அனந்தன், திரு. எம். கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்பார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், நிர்வாகப் பெருமக்கள், இயக்க நண்பர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.