வறுமை, வேலையின்மை, பசி காரணமாக வயிற்றுப் பிழைப்புக்காக யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மாட்டிறைச்சி விற்றதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை அலஹாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

மேலும், இது மாநில அரசின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தானே தவிர பொது அமைதிக்கு எந்த குந்தகமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்றும் கூறியது.

உத்தர பிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பதாக வந்த புகாரை அடுத்து போலீசார் சோதனை நடத்தியதில், பர்வேஸ் மற்றும் இர்பான் ஆகிய இருவரும் மாட்டிறைச்சி விற்பது தெரியவந்தது.

வீட்டின் உள்ளே யாருக்கும் தெரியாமல் இறைச்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி விற்று வந்த இவர்களைப் பிடித்த போலீசார் இவர்களுக்கு உதவியதாக இவர்களுடன் சேர்ந்து மேலும் மூன்று
பேரைக் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தின் போது அந்த கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் பலர் ஒன்று திரண்டு பசுவதை செய்யப்படுவதற்கு எதிராக கோஷம் எழுப்பியதால், பொது அமைதிக்கும் மத நல்லிணக்கத்திற்கும் பங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பசுவதை தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றில் கைது செய்யப்பட்ட இவர்கள், தங்கள் மீதான வழக்கை தள்ளுபடி செய்ய நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.

வழக்கை விசாரித்த அலஹாபாத் நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ் சின்ஹா மற்றும் சரோஜ் யாதவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், வறுமை, வேலையின்மை, பசி காரணமாக வயிற்றுப் பிழைப்புக்காக யாருக்கும் தெரியாமல் மாட்டிறைச்சி விற்று வந்தவர்கள் மீது மத நல்லிணக்கம் மற்றும் பொது அமைதிக்கு ஊறு விளைவித்ததாகக் கூறி தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி இருப்பது தவறானது என்று கூறி ரத்து செய்துள்ளனர்.

மேலும், இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை தான் என்றும் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.