டில்லி

முன் கூட்டியே நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிக்கப்பட்டதையொட்டி துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவை எதிர்க்கட்சியினர் சந்தித்துள்ளனர்.

கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலத் தொடர் இன்று அதாவது ஆகஸ்ட் 14 வரை நடைபெறுவதாக இருந்தது.  அவையில் பெகாசஸ் ஒட்டுக் கேட்பு குறித்து விவாதிக்க மத்திய அ ரசு மறுத்ததால் தினமும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.  இதையொட்டி நாடாளுமன்ற தொடர் நடைபெற முடியாமல் போனதால் நேற்று முன் தினம் முடித்து வைக்கப்பட்டது.

இதையொட்டி நேற்று 14 எதிர்க்கட்சிகள் கூடி நாடாளுமன்றத்தில் பேரணி ஒன்றைத் தொடங்கி குடியரசுத் தலைவரைச்  சந்திக்கச் சென்றனர்.  ஆனால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் நாடாளுமன்ற வளாகத்திலேயே பேரணி முடிந்தது.  இதன் பிறகு துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களைவை தலைவருமான வெங்கையா நாயுடுவை எதிர்க்கட்சியினர் சந்தித்துள்ளனர்.

அவர்கள் வெங்கையா நாயுடுவிடம் அவையில் நேற்று முன் தினம் நடந்தவை குறித்து விளக்கம் அளித்தனர். அத்துடன் மத்திய அரசு நாடாளுமன்ற விதிகளைப் பின்பற்றுவதில்லை எனவும் சட்டதிட்டங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.  சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்துள்ளது.