balamurali3
கிட்டத்தட்ட 75 ஆண்டுகாலம் தன் குரல் வளத்தால் தலைமுறை தலைமுறையாய் கோடிக்கணக்கான பேரை, ஆட்டிப்படைத்துவந்த அபூர்வ மனிதர், கர்நாடக சங்கீத இசைமேதை, பாலமுரளி கிருஷ்ணா..
சிறுவன் முரளிகிருஷ்ணாவுக்கு ஒன்பது வயது.. விஜயவாடாவில் வருடாந்திர இசைவிழா… தன்சிஷ்யர்களை தயாராக இருக்குமாறு சொல்கிறார் இசைமேதை பாருபள்ளி ராமகிருஷ்ணய்யா பந்துலு.. விழாவில் பாடுவோர் பட்டியலில் அனுபவம் மிக்கவர்களுடன் முரளிகிருஷ்ணாவின் பெயரும் இடம்பெறுகிறது..
வாய்ப்பாட்டில் சீடனாகி சில நாட்களே ஆன சிறுவனை எப்படி சேர்த்தீர்கள் என்று பந்துலு கொந்தளிக்கிறார். விளம்பர நோட்டீசுகள் விநியோகிக்கப்பட்டுவிட்டதால் வேறு வழியின்றி 18.07.1940 அன்று மேடை ஏற்றப்படு கிறார்.
balamurali1
அரைமணிநேரம் என்ற கெடுவுடன் தொடங்கிய முரளிகிருஷ்ணாவின் மேஜிக், இசை யின் சகல பரிமாணங்களி லும் புகுந்து விளையாடுகிறது..அப்படியொரு கானமா என ஒட்டுமொத்த கூட்டமும் மெய்சிலிர்த்துப்போக, வரைகளை தாண்டி மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வாய் வர்ண ஜாலத்தால் மலைக்க வைக்கி றான் சிறுவன்.
என்னடா இந்த அதிசய குரல்,,,அதுவும் இவ்வளவு சிறிய வயதில்.. என்று மிரட்சி யில் நாதழுத்த பந்துலு, மேடையில் சொல்கிறார்..’’இன்று முதல் இவன் வெறும் கிருஷ்ணா அல்ல பாலமுரளி கிருஷ்ணா’’
ஏழுவயதில் வயலின் சிறுவனாக தன்னிடம் வந்தவன், அலாதியான ஆர்வத்தால் வாய்ப்பாட்டில் கலக்குவான் என்று துளியும் பந்துலு எதிர்பார்க்காததால்தான் அவர் உணர்ச்சிவசத்திற்கு ஆளானார்.
பந்துலுவின் ஆச்சர்யம் வீண்போகவேயில்லை.. பாலமுரளி கிருஷ்ணாவின் கர்நாடக இசை படராத இடமே யில்லை என்கிற அளவுக்கு சாதனைகள் போய்க்கொண்டே இருந்தன.. வசீகரக்குரலால் எம்.எஸ்.சுப்புலட்சுமி யைப்போல் உலகம் முழுவதும் ஏராளமான மேடைக்கச்சேரிகள் நடத்தி வெளிநாட்டினர் மத்தியிலும் கர்நாடக சங்கீதத்தின் அருமை பெருமைகளை அறியச்செய்தவர் பாலமுரளி.
மேற்குகோதாவரி மாவட்டத்தின் மங்களம்பள்ளி பாலமுரளிக்கு தெலுங்குதான் தாய் மொழி என்றாலும் தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம் உள்பட பல மொழிகளில் புகுந்து விளையாடிய பன்மொழி வித்தகர்.
சங்கீத கலாநிதி, பாரத் விபூஷண், யுனஸ்கோ என அவர் வாங்கிய மேல் மட்ட விருதுகளை பிடிக்கவே மடிகொள்ளாது என்றால், உள்ளூர் விருதுகள் எண்ணிக்கையை கேட்கவா வேண்டும்.
மேடைக்கு எதிரே இருப்பவர்களை பல மணிநேரம் தன் குரலால் பரவசத்தில் மிதக்கச்செய்யும் ஆற்றல்படைத்த பாலமுரளி, திரை உலகிலும் தனக்னெ தனி சிம்மாசனத்தை அமைத்துக்கொள்ள தவறியதில்லை.
balamurali2
1976ல் ஹம்சாகீதே என்ற கன்னடபடத்திற்காக சிறந்த பின்னணி பாடகர் என தேசிய விருதுபெற்ற அவருக்கு, அதே கன்னடத்தில் மாதவார்ச்யா படத்திற்காக சிறந்த இசையமைப்புக்காக தேசிய விருது அடைந்தது.
தமிழில் கலைக்கோயில் படத்துக்காக பாடிய, ‘தங்க ரதம் வந்தது வீதியிலே..’ கவிக்குயில் படத்தின்.. ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்..’ நூல்வேலி படத்தில் ‘மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே’ போன்ற பாடல்கள் லட்சம் தடவை கேட்டாலும் சலிக்காதவை. கேட்கும் ஒவ்வொருமுறையும் புதிய அனுபவம் தந்துகொண்டே இருப்பவை.
கமல்ஹாசன் போன்றவர்கள் இன்றளவும் அற்புதமாய் பாடுகிறார்கள் என்றால் அது பாலமுரளிகிருஷ்ணா என்ற குரு கொடுத்த, வரம்.. நாட்டியத்திலும் நடிப்பிலும் அசத்திய ஜெயலலிதாவுக்கு பாலமுரளி இசைமேல் அவ்வளவு ஈர்ப்பு.
பத்தாண்டுகளுக்கு முன்பு பிரான்சில் செவாலியே விருது பெற்ற பாலமுரளி கிருஷ்ணாவை பாராட்டி நடந்த விழாவில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, ‘’பாரத ரத்னா விருதுக்கு தகுதியான இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா. அதற்கான நேரம் விரைவில் வரும்..அப்போது நாங்கள் பக்கபலமாக இருப்போம்’’ என்றார்
25000க்கும் மேலான மேடைகளில் இசை யாகம் நடத்திய பாலமுரளி, அதே மேடையில் சொன்னார், ’’ நான் இன்னமும் கர்நாடக இசையில் கற்றுக்கொள்ள வேண்டியதும் அதற்காக பணியாற்ற வேண்டியதும் ஏராளமாக உள்ளது”
86வயதில் மறையும் வரை இசையுலகில் அவர் குரல்வளம் ஜாலங்கள் புரிந்தாலும் குணத்தில் தன்னடக்கம் மட்டுமே பாலமுரளி கிருஷ்ணாவின்  நிரந்தர ராகமாகும்.
ஆனால் அவருடைய நிஜ ஆளுமையை திருவிளையாடல் படம் 51 ஆண்டுகளுக்கு முன்பே, பாலையா பாத்திரம் மூலம் வெளிப்படுத்திவிட்டது..
‘’ஒரு நாள் போதுமா, இன்றொரு நாள் போதுமா’’ பாடலின் கடைசியில் பாலமுரளி கிருஷ்ணா, இப்படி பாடிமுடிப்பார்:
“.இசை தெய்வம் நானடா..!”
–    ஏழுமலை வெங்கடேசன்