சேகர் ரெட்டி –  மணல் குவாரி  – ரத்தினம்
புதுக்கோட்டை,
சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சேகர் ரெட்டியின் கூட்டாளியும், சர்வேயரின் எடுபிடியுமாக இருந்த ஒருவர்  இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக உள்ளார்.
‘அட்லஸ் சைக்கிளை’ மிதித்து வந்த அவர் இன்று ‘ஆடி’ காரில் வலம் வருகிறார்.
சர்வேயருக்கு உதவியாக சைக்கிளில் வந்தவர் பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு எப்படி அதிபதியானார்….? அதுகுறித்த பரபரப்பு தகவல்கள்….
புதுக்கோட்டை மாவட்டம், முத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கே.ரத்தினம். இவருக்கு தற்போது வயது 54.  நில அளவைத்துறையில் சர்வேயரின் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். சர்வேயரின் உதவியாளராக இருந்த ரத்தினம், வேலைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
வேறு இடத்தில் வேலை பார்த்து வந்த ரத்தினம், 1980ம் ஆண்டு திண்டுக்கலுக்கு மாற்றலாகி வந்தார்.  அங்கு ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார்.  பிளாட் விற்பனையில் நல்ல லாபம் கண்டார். அதைத்தொடர்ந்து செங்கல் சூளை, கிரஷர் உள்பட பல்வேறு தொழில்களிலும் கால் பதித்தார்.
பிசினஸ் பெருகியதால், கடந்த  2005ம் ஆண்டு  அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
அதைத்தொடர்ந்து தனது பார்வையை மணல் குவாரி நோக்கி திருப்பினார். மணல்தான் வருங்காலத்தின் தங்கம் என நம்பினார். அதனால்  முழு மூச்சாக மணல் குவாரி தொழிலில் இறங்கினார்.  இதன் காரணமாக பிரபலங்களின் நட்பு அவருக்கு கிடைத்தது. மணல் குவாரியில் கொடி கட்டி பறந்த சிவகங்கை படிக்காசு,  புதுக்கோட்டை  மச்சந்திரனின் போன்றோரின் நட்பு கிட்டியது. இவர்கள் மூலமே சேகர்ரெட்டியின் தொடர்பு ஏற்பட்டது.
இதன் வாயிலாக சேகர் ரெட்டியுடன் இணைந்து பாட்னராக மாறினார். இதையடுத்து  தமிழகம் முழுவதிலும் மணல் குவாரிகளின் சப் கான்ட்ரக்ட் இவருக்கு கிடைத்தது.
சேகர் ரெட்டியின் எஸ்.ஆர்.எஸ். மைண்ட்ஸ் நிறுவனத்திலும் பார்ட்னரானார். கிராவல் எனப்படும் செம்மண் அள்ளும் உரிமமும் ரத்தினத்திற்கே கிடைத்தது.
ரத்தினம் தற்போது திண்டுக்கல் ஜி.டி.என் கலைக்கல்லூரியில் முதன்மை செயல் அலுவலராக உள்ளார்.
திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் இவருக்கு சொந்தமான பிரமாண்ட ரத்தின விலாஸ் உணவகம் உள்ளது.
சென்னையில் முகப்பேர், தி.நகர் மற்றும் புதுச்சேரியிலும் வீடு உள்ளது.
திண்டுக்கல்-திருச்சி சாலையில் ரியல் எஸ்டேட் நிறுவனமான தரணி குழுமம் செயல்படுகிறது.
தாடிக்கொம்பில் நவீன செங்கல் தொழிற்சாலையும் உள்ளது.
மேலும் இவருக்கு ஆயிரக்கணக்கான லாரிகளும் சொந்தமாக உள்ளது.
இவரது வீட்டு விழாக்களில் அதிமுக அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகளும் பங்கேற்று பரிசு பெற்று செல்வது வாடிக்கையானது.
கடந்த 1999ம் ஆண்டு நில அளவைத்துறையில் உதவியாளராக வேலை செய்தபோது, வீடு கட்ட ரூ.2 லட்சம் லோன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்தார். ஆனால், லோன் கட்டுவதற்கு போதுமான சம்பளம் இல்லை என்று அவரது விண்ணப்பத்தை நிராவரித்தனர் வங்கி அதிகாரிகள்.
ஆனால், கடந்த 16 ஆண்டுகளில் ரத்தினத்தின் வளர்ச்சி ரத்தின கம்பளமாக மாறி உள்ளது. தற்போது ரத்தினத்திடம் விலை உயர்ந்த ஆடி, ஜாகுவார், பென்ஸ் போன்ற 10 கார்கள் உள்ளன. இந்த கார்களின் மதிப்பு மட்டுமே ரூ.5 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.