சென்னை,
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து உள்ளார். அவருக்கு அதிமுக தொண்டர்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. இதன் காரணமாக சசிகலா கலக்கமடைந்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவுக்கு யார் பொதுச்செயலாளர், யார் தலைமையேற்று கட்சியை நடத்தி செல்வார்கள் என தொண்டர்கள் குழப்பமடைந்து உள்ளனர்.
அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் அண்ணன்மகள் தீபா, தானும் அதிமுகதான். எனது அத்தை யான ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என சசிகலாவை எதிர்த்து பேசி வருகிறார்.
இதற்கிடையில், சசிகலாவோ, தனக்கு நெருக்கமானவர்கள் மூலம், தன்னை அதிமுக பொதுச் செயலாளராக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையில் வரும் 29 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை தேர்ந்தெடுக்க தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டாகி விட்டது. இதன் காரணமாக அதிமுக கட்சியின்  பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படு வது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையில் சசிகலா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தடை விதிக்க கோரி, சென்னை ஐகோர்ட்டில் சசிகலாபுஷ்பா எம்.பி.யும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் ஜெ வின் அண்ணன் மகள் தீபாவுக்கு தமிழகம் முழுவதும் அதிமுகவினரிடைய ஆதரவு பெருகி வருகிறது. கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியில் பல்வேறு இடங்களில் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து, பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
கரூரை அடுத்த கல்லடை ஊராட்சிக்குட்பட்ட பல கிராமங்களில், அ.தி.மு.க நிர்வாகிகள் தங்களது புகைப்படத்துடன், ஆதரவு பேனர்கள் வைத்துள்ளனர்.
ஆட்சியிலும், கட்சியிலும் பதவி வகிப்பவர்கள், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலை யில், தமிழகத்தின் பல இடங்களில், தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்ட முடியாத தொண்டர்கள் பலர், தீபாவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்து வருகின்றனர்.
இது கிராம் கிராமமாக அதிகரித்து வருகிறது. முதலில் பெயரை மட்டுமே பேனரில் குறிப்பிட்டு வந்தவர்கள், இப்போது தங்கள் புகைப்படத்தையும் வைக்க துவங்கி உள்ளனர். இதை பார்த்து, அதிமுக நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்..
இதேபோன்று சிவகங்கை மாவட்டம் பள்ளத்துாரில் தீபாவை ஆதரித்து பேனர் வைக்கப்பட்டி ருந்தது.  ஆனால் பேனர் வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் இதனை அகற்ற காவல் துறையினர் உத்தரவிட்டனர்.
‘அம்மாவின் மருமகளே, தீபா அம்மா அவர்களே, நீங்கள் வாருங்கள் கட்சியை வழி நடத்த வருக! வருக!! என வரவேற்கிறோம் என்ற வாசகங்களுடன் வைக்கப்பட்டிருந்த அந்த பேனர் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே போன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாளுக்கு நாள் பெருகி வரும் தீபா ஆதரவு போஸ்டர் மற்றும் பேனர்களால் அதிமுக நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.