சென்னை: ராஜீவ்காந்திக்கு நற்சான்றிதழ் வழங்கும் இடத்தில் சீமான் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் விடுதலையான பேரறிவாளன் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வைகோ உள்பட பலரை உள்ளிட பலரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அவரை திமுக தலையில் தூக்கி வைத்துகொண்டாடி வருகிறது. ஒரு முன்னாள் பிரதமரின் கொலை வழக்கின் குற்றவாளியை மாநில முதல்வரான ஸ்டாலின் கட்டித்தழுவி வரவேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேரறிவாளன் விடுதலை வரவேற்றதுடன்,  ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகியா? எனவும், ரூ.400 கோடி பீரங்கி ஊழல், ஒரு ராணுவத்தை அனுப்பி இனத்தையே அழித்தது என்று பல விஷயத்தை ராஜீவ் காந்தி செய்துள்ளார் என விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பூந்தமல்லியில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிம் பேசிய கே.எஸ்.அழகிரி,  “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது, எங்களது கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடியது. ஆனால், அந்தக் கொலையாளிகளின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடுவதைப் பார்க்கிறபோது, இதயத்தில் இருந்து ரத்தக் கண்ணீர் வடிகிறது. எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனிதாபிமானத்தோடு வாழ்வதுதான் மனிதத்தன்மை என்று நாங்கள் கருதுகிறோம். பழிவாங்குவது என்பது மனித தன்மையல்ல. மிருகங்களுக்குக்கூட பழிவாங்குகிற எண்ணம் கிடையாது. ஆனால், இதுபோல ஒரு சிலர் பழிவாங்கும் எண்ணத்தோடு வாழ்ந்து வருகிறார்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.

இதைத்தொடர்ந்து திமுக கொண்டாடுவதை விமர்சிக்கிறார்களா, திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளீர்களே என்று கேள்வி எழுப்பியபோது, அதற்கு பதில் அளித்தவர், தேர்தலுக்கு முன்பே நாங்கள் திமுகவுடன் தெரிந்துதானே கூட்டணி வைத்தோம். இன்று அவர்கள் கொள்கையை அவர்கள் சொல்கிறார்கள், எங்கள் கொள்கையை நாங்கள் சொல்கிறோம் என்று பதில் அளித்தார்.

ராஜீவ்காந்தி குறித்து சீமான் விமர்சனம் செய்வது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கே.எஸ்.அழகிரி, சீமான் வேடிக்கையாக பேசுவதில் வல்லவர். ராஜீவ்காந்திக்கு நற்சான்றிதழ வழங்கும் இடத்தில் சீமான் இல்லை. துடுக்கான பேச்சுக்களால் விளம்பரம் தேடிக்கொள்கிறார் சீமான் என்றும் விமர்சித்துள்ளார்.