சிவ சிவ மாபெரும் வெற்றி பெற… பிரம்ம முகூர்த்த ரகசியம்… இதோ…

பிரம்ம முகூர்த்தம் குறித்த ஸ்ரீலஸ்ரீ அருள்மொழி அம்மையாரின் இணையப்பதிவு


பிரம்ம முகூர்த்த ரகசியம் தெரியுமா?

உங்கள் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த, நினைத்த காரியங்களை நிறைவேற்ற, லட்சுமி கடாட்சம் நிறைந்த பிரம்ம முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம். பிரம்ம முகூர்த்தத்திற்கு எந்தவிதமான தோஷங்களும் கிடையாது. அந்த நேரம் எப்போதுமே சுபவேளைதான். இந்நேரத்தில் எழுந்து, குளித்து, இறைவழிபாட்டைச் செய்து நமது வேலைகளைச் செய்யத் துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்.

பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம், சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்! எனவேதான் பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் மற்றும் வீடு கிருகப்பிரவேசம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.

சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள அதிகாலைப் பொழுதை உஷத் காலம் என்பர். அந்த சமயத்தில் தேவர்கள், சிவபார்வதி, மகாலட்சுமி போன்ற தெய்வங்கள் வானமண்டலத்தில் சஞ்சரிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் கண்டிப்பாகத் தூங்கக்கூடாது. தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்ய வேண்டும். இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தைத் தரும்.

உடலுக்கும், உள்ளத்துக்கும், ஊட்டம் தருவது அதிகாலையில் கண் விழிப்பதாகும்! அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அதிகாலை நேரத்தில் எழுவதால் அன்றைய நாளில் செய்யும் காரியங்கள் அனைத்தும் சத்தம் இல்லாமலும், பரபரப்பு இல்லாமலும், சிறப்பாக முடியும். சுத்தமான காற்று இருக்கும் அதிகாலைப் பொழுதில் வெளியே நடந்து செல்வதால், சுத்தமான காற்று சுறுசுறுப்பை உண்டாக்கி நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.

அதிகாலை பிரார்த்தனை :

ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில், வீட்டில் வேலை செய்ய வேண்டும். பின்பு குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். உறங்க வேண்டிய நேரத்தில் விழித்திருந்தால், நோய்கள் எல்லாம் நம்மை நோக்கி வரும். அதனால்தான் நமது பெரியோர்கள் அதிகாலையில் எழ வேண்டும் என்றார்கள். அந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கின்ற அனைத்துவித பிரார்த்தனைகளும் கண்கூடாகவே நிறைவேறும்.

சூரிய நமஸ்காரம் :

வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக்கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இக்கதிர்கள் நம் உடலில் படும்போது நரம்புகள் புது தன்மை பெறுகின்றன. கண்கள் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. மேலும் உற்சாகத்தையும் கொடுக்கின்றன. அதனால்தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். வெற்றி கிடைக்கும் :

நமது மனதில் இருக்கும் எண்ணங்களை இறைவனிடம் எடுத்து வைப்பதற்கான நேரம்தான் இந்த பிரம்ம முகூர்த்தம். உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பிரம்ம முகூர்த்தத்தில் தொடர்ந்து எந்த விஷயங்களைச் செய்கிறோமோ அதில் நாம் மாபெரும் வெற்றியை அடைய முடியும். ஆரம்பிப்பது சரியாக இருந்தால் முடிவும் சரியாக இருக்கும். ஆரம்பிக்கும் நேரம் பிரம்ம முகூர்த்தமாக இருந்தால், நம் வாழ்வில் வெற்றி இடம்பெறும்.

ஆகையால் சூரியனுக்கு முன் எழுந்து, சூரியனை விட உயர்ந்த வாழ்க்கையை அடைவோம்