டெல்லி: 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் செலுத்தும் பணியை விரைவுபடுத்துங்கள் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி உள்ளார்.

கொரோனா தொற்று பரவலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது. அதனால் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்துள்ள நிலையில், கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15-18 வயதுகுட்பட்டவர்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,15-18 வயதுகுட்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இந்தியாவின் தேசிய கொரோனா தடுப்பூசித் திட்டம்,கிடைக்கக்கூடிய அறிவியல் சான்றுகள் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள்.மேலும்,இந்தியாவில்,166.68 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசியை நாங்கள் வழங்கியுள்ளோம்,இது உலகிலேயே மிக அதிகமாக உள்ளது.

,15-18 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா  தடுப்பூசி  கடந்த ஜனவரி 3,2022 முதல் தொடங்கப்பட்டது மற்றும் இன்று வரை இந்த வயதினருக்காக மாநிலங்களுக்கு 4.66 கோடி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.இதன் விளைவாக ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதியில் 63% பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மேலும்,15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசி Covaxin ஆகும்.இது முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கு இடையில் 28 நாட்கள் இடைவெளியைக் கொண்டுள்ளது.

அந்த வகையில்,கடந்த ஜனவரி 3 ஆம் தேதியன்று முதல் டோஸ் பெற்ற 15-18 வயதுக்குட்பட்டவர்கள் 2 வது டோஸுக்கு தகுதி பெற்றுள்ளனர். எனவே,15-18 வயதுக்குட்பட்ட பயனாளிகளுக்கு 2 வது டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மாநில அரசுகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.