சென்னை: “ஒட்டுமொத்த திராவிடர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் சீமானின் கருத்து உள்ளது!” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசிய இளையராஜா அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அவரது  தனிப்பட்ட கருத்தை அரசியல் கட்சியினர், திரையுலகினர் பலர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், அவர் தனது கருத்தை வாபஸ் பெற முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இது சர்ச்சை யாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இளையராஜா மகன் யுவன் சங்கர் ராஜா என்னும் அப்துல் ஹாலிக் (இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரியில் யுவன் தான் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விட்டதாக தனது டிவிட்டர் கணக்கில் தெரிவித்தார். தன்னுடைய முஸ்லிம் பெயர் அப்துல் ஹாலிக் என்பதாகவும் தெரிவித்தார்.) தனது டிவிட்டர் பக்கத்தில், கருப்பு நிற உடை அணிந்து, கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன்’ என்று  பதிவிட்டிருக்கிறார். இதுவும் வைரலான நிலையில், அப்பாவுக்கு  எதிரான மனநிலையில் மகன் இருப்பதாக விவாதிக்கப்பட்டது. இதற்கு வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜாவின் பதிவு பற்றி கருத்து கூறிய சீமான், தம்பி முதலில் குழப்ப வேண்டாம், ஏன் இந்த குழப்பம் இரண்டு அடையாளம் தேவையில்லை என்று கூறியதுடன்,, நீ தமிழனாக இரு அல்லது திராவிடனாக இரு என்று சொன்னார். திராவிடன், தமிழன் ஏன் பல முகமூடிகளை அணிய வேண்டும் என்று கூறியதுடன், முதலில் இந்தியன், பிறகு திராவிடன், அப்புறம் தமிழன், பிறகு எந்த சாதி என்று கேட்பார்கள் என்று கூறினார்.

எது திராவிடம் யார் திராவிடர் தேவைப்பட்டால் இந்தியன் என்கிறார்கள், தேவைப்பட்டால் திராவிடன், தேவைப்பட்டால் தமிழன் என்று சொல்கிறீர்கள் என்றார். குழம்பாமல் பெருமைக்குறிய தமிழன் என்று சொல்லுங்கள்.  கேஜிஎப் பட ஹீரோ யாஷ் தான் பெருமைக்குரிய கன்னடன் என்றுதான் சொல்கிறார். அதே போல பெருமைக்குரிய தமிழன் என்று சொல்ல வேண்டியதுதானே. என்று கூறியதுடன்  யுவன் சின்னப்பிள்ளை அதை விட்டு விடுவோம் , அது அவருடைய கருத்து என்ற கூறியதுடன், எருமை மாடு கூட கருப்புதான் கருப்பா இருப்பவர்கள் எல்லாம் திராவிடர்களா? தென் ஆப்ரிக்காவில் கூட கருப்பாகத்தான் இருக்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தின் நிறம் கருப்பு. உட்கார்ந்து சாப்பிடுபவர்கள் தோலின் நிறம் மினுமினுப்பாக இருக்கும் என்று சொன்ன சீமான்   கருப்பு என்றாலே திராவிடன் அல்ல தமிழர்கள் கருப்பாக இருக்கக் கூடாதா என்று கேட்டார்.

சீமானின் கருத்தும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சீமானின் விமர்சனத்தைக்கண்டு கொந்தளித்துள்ளார். எருமை மாட்டுடன் சீமான் ஒப்பிட்டு பேசியது தவற, இது ஒட்டுமொத்த திராவிடர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் சீமானின் கருத்து உள்ளது என்றும், அதற்கு தங்களது கண்டனத்தை தெரிவிப்பதாக கூறியுள்ளர்.