டெல்லி: நூபுர் சர்மா வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறிய கருத்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், நீதிபதிகள் லட்சுமணன் கோட்டை தாண்டிவிட்டனர் என்று முன்னாள் நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் என 117 பேர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், இது, மிகப்பெரிய ஜனநாயகத்தின் நீதி அமைப்பில் அழியாத வடுவை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இஸ்லாம் குறித்து விமர்சித்த பாஜக பிரமுகர், நுபுர் சர்மாமீதான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், பார்திவாலா அமர்வு, இந்த விவகாரத்தில் ஒரு தலைப்பட்சமாக கருத்து தெரிவித்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்துக்கு மூலக்காரணமாக இருந்த கியான்வாபி மசூதியில் உள்ள லிங்கம் குறித்து இஸ்லாமியர்கள் கூறிய கருத்தை செவிமடுக்காமல், நூபுர்சர்மா மீது மட்டும் தேவையற்ற கருத்தை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிபதிகளின் ஒருதலைப்பட்சமான கருத்து விவாதபொருளாகி உள்ளது.

இந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், பார்திவாலா அமர்வின் கருத்துக்கு எதிராக, 15 ஓய்வுபெற்ற நீதிபதிகள், 77 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், 25 ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை அதிகாரிகள் உட்பட 117 முன்னாள் அதிகாரிகள், நூபுர்சர்மா விவகாரத்தில் நீதிபதிகள், லட்சுமணன் கோட்டை தாண்டி விட்டனர் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில்,  ஜனநாயக நாட்டில் அரசின் அனைத்து துறைகளும் அரசமைப்பு சாசனத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். நுபுர் சர்மா வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் லட்சுமணன் கோட்டை தாண்டிவிட்டனர். நீதிபதிகளின் கருத்து இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உத்தரவில் இடம்பெறாத அம்சங்கள் செய்தி சேனல்களில் மிகைப்படுத்தி வெளியிடப்படுகின்றன.

இது நீதித் துறை தர்மத்துக்கு ஏற்புடையதாக இல்லை. நாட்டில் தற்போது நடக்கும் சம்பவங்களுக்கு நுபுர் சர்மா மட்டுமே காரணம் என்று கூறுவது அறிவுப்பூர்மாக இல்லை. நீதிபதிகளின் கருத்துகள் இந்திய நீதித் துறையில் வடுவை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்துக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும்கூட அச்சுறுத்தல் ஏற்பட்டி ருக்கிறது. முறையான விசாரணை நடத்தப்படாமல் நுபுர் சர்மாவை குற்றவாளியாக அறிவிப்பது ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.