பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அவரை டெல்லிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிறன்று அவரது வீட்டில் மாடிப் படியில் தவறி விழுந்த லாலு பிரசாத்துக்கு வலது தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

ஏற்கனவே, சிறுநீரகம், நுரையீரல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் கடந்த மூன்று தினங்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

லாலு பிரசாத் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் விசாரித்தனர்.

இந்நிலையில், அவரது உடல்நிலையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படாததை அடுத்து அவரது மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் குடும்பத்தினர் அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவெடுத்திருக்கின்றனர்.

இன்று மாலை 4:30 மணிக்கு பாட்னாவில் இருந்து புறப்பட இருக்கும் ஏர் ஆம்புலன்ஸில் அவரது மனைவி ராப்ரி தேவி, மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ், மகள் மிசா பாரதி ஆகியோர் உடன் செல்ல இருக்கின்றனர்.