ஜெய்ப்பூர்: நூபுர் சர்மா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும்  ராஜஸ்தான் மாநிலத்தில் டெய்லர் ஒருவர் பயங்கரவாதிகளால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், முஸ்லிம் மதகுரு ஒருவர், நூபுர் சர்மா தலையை துண்டிப்பவருக்கு வீடு பரிசு தருவதாக அறிவித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தலைமறைவான அந்த  முஸ்லிம் மதகுருவை இன்று அதிகாலை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

நூபுர்சர்மா விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நூபுர் சர்மா தனது கருத்துக்கு தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் ஒருதலைப்பட்சமான கருத்தும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. சிவலிங்கம் குறித்த விமர்சித்த இஸ்லாமியர் மீது எந்தவொரு கருத்து தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. நீதித்துறை அனைவருக்கும் சமமாகத்தானே இருக்க வேண்டும், ஆனால், ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளதாக கூறி, நீதிபதியின் கருத்தை வாபஸ் பெற வலியுறுத்தி தலைமைநீதிபதியிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த பரபரப்புக்கு மத்தியில்,  ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்கா மதகுரு சல்மான் சிஷ்டி என்பவர்,  “நூபுர் சர்மாவின் தலையை துண்டித்து என்னிடம் கொண்டு வருபவர்களுக்கு என் வீட்டை பரிசாக கொடுப்பேன்” என்று பேசி வீடியோ  வெளியிட்டிருந்தார். இது நாடு முழுவதும் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராஜஸ்தான் மாநில அரசுக்கு மேலும் இக்கட்டான சூழலை உருவாக்கியது. இதையடுத்து, அவரை கைது செய்ய காவல்துறையினர் முடுக்கி விடப்பட்டனர். இந்த நிலையில், மதகுரு சல்மான் சிஷ்டி ஒரு இடத்தில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்று அதிகாலை அந்த இடத்தை சுற்றி வளைத்த காவல்துறையினர்,  சல்மான் சிஷ்டியை கைது செய்து ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.. அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

இதற்கிடையே அஜ்மீர் தர்கா அஜ்மீர் தர்கா மதகுரு சல்மான் சிஷ்டி குறித்து, அஜ்மீர் தர்கா நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மதகுரு சல்மான் சிஷ்டியின் கருத்துக்கும், தர்காவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.