டெல்லி: கோவிட்-19 பூஸ்டர் டோஸ் இடைவெளி ஆறு மாதங்களாக குறைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இந்தியாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பரவல் ஏறி இறங்கி காணப்படுகிறது. இது கொரோனாவின் 4வது அலை என கூறப்படுகிறது. இருந்தாலும் தற்போது உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இதிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முக்கவசம், சமூக இடைவெளி உள்பட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

சமீபத்தில் ஓமிக்ரான் என்னும் புதிய திரிபு வரத் தொடங்கிய நிலையில், தற்போது உலக சுகாதார நிறுவனம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வலியுறுத்தி வருகிறது. இந்த தடுப்பூசி குறித்து பல சந்தேகங்களும் கேள்விகளும் மக்களிடையே இருக்கிறது.  இருந்தாலும்,  கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் உடனே எடுத்துக்கொள்ளும்படியும், இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்படியும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவிட்-19 பூஸ்டர் டோஸ் இடைவெளி ஆறு மாதங்களாக குறைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை ராஜேஷ் பூஷன் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவேஇரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், அதே தடுப்பூசியை மூன்றாவது டோஸ் ஆக போட வேண்டும் என்று அறிவித்திருந்ததுடன், அதற்கான கால இடைவெளி 9மாதம் என அறிவிக்கப்பட்டது. இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கும் பூஸ்டர் தடுப்பூசிக்கும் இடையே 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் இடைவெளி இருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது  இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டவர்கள், 6 மாதம் கழித்து பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.