டில்லி

டில்லியில் ஜி 20  உச்சி மாநாட்டையொட்டி 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

வரும் 9  மற்றும் 10 ஆம் தேதிகளில் டில்லியில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி தலைநகர் டில்லியில் பலத்த காவல்துறை பாதுகாப்பு இடப்பட்டு உள்ளது. மேலும் இந்திய விமானப் படையைச் சேர்ந்த போர் விமானங்கள் உள்பட வான்வழியான கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ஜி 20 உச்சி மாநாட்டில், 20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிற நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்க இருக்கின்றனர். இந்த  டில்லி மாநாட்டில் பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

டில்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு ஜி-20 மாநாட்டை முன்னிட்டு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று டில்லி மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, டில்லியில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்குச் செப்டம்பர் 8 முதல் 10 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.