சென்னை: காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டம் பல கட்டங்களாக அமல்படுத்தப்படும் என்றும், அதில் பயனடையும் குடும்பங்கள் பல கட்டங்களாக கண்டறியப்படுவார்கள் என்றும் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதவாது, “பொருளாதார நிபுணர்கள் மற்றும் அறிஞர்களிடம் இந்த விஷயம் தொடர்பாக போதுமான அளவில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த திட்டத்தை செயல்படுத்த, இந்தியாவிற்கு பொருளாதார பலமும் திறனும் இருக்கிறது என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8% என்பதாக இருக்கும். முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனும், இத்திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமான ஒன்றுதான் எனக் கூறியுள்ளார்.

இத்திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படுவதோடு, இதில் பயனடையும் 5 கோடி குடும்பங்களும், பல கட்டங்களாக கண்டறியப்படுவார்கள். இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் முன்னதாக, இதைப் பரீட்சித்துப் பார்க்க வேண்டியுள்ளது” என்றார்.

– மதுரை மாயாண்டி