நெல்லை: நெல்லையில் தனியார் பள்ளியான சாப்டர் பள்ளி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் பரபரப்பு நிலவுகறிது.
நெல்லை டவுண் பகுதியில் அமைந்துள்ள சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் சுவர் இடிந்துவிழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பள்ளியின் இடைவேள நேரத்தின்போது, கழிப்பறைக்கு மாணவர்கள் சென்றிருந்த நிலையில், திடீரென சுவர் இடிந்து, மாணவர்கள் மேல் விழுந்துள்ளது. பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்தில் இடிந்து விழுந்தவுடன் ஆங்காங்கே அனைவரும் சிதறி ஓடியுள்ளனர்.
இதையடுத்து, இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், காவல்துறை, வருவாய் துறையினர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளியில் பெற்றோர்கள் குவிந்து வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் கட்டடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை அளிக்க பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அறிக்கையின் அடிப்படையில் பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
இநத விபத்து நடைபெற்றபோது, சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். தற்போது 8 மற்றும் 9ஆம் வகுப்பு தவிர அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவித்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இருந்த மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், நெல்லையில் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தை கண்டித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மாணவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லையில் பயங்கரம்: தனியார் பள்ளி சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் பலி… 2 பேர் காயம்