புதுடெல்லி:

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது.


கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்ததும், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் இரு அணிகள் உருவாகின.

ஓ பன்னீர்செல்வத்தை பாண்டியராஜன், சண்முகநாதன், சின்னராஜ், மாணிக்கம், மனோரஞ்சிதம், ஆறுக்குட்டி, செம்மலை, மனோகரன், சரவணன், நட்ராஜ் ஆகியோர் ஆதரித்தனர்.

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி முதல்வர் பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 10 பேர் வாக்களித்தனர்.

எனவே, ஆளும் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்த 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி, தமிழக ஆளுநரிடம் திமுக மனு கொடுத்தது.

இதில் நடவடிக்கை எடுக்கப்படாததால், சட்டப்பேரவை கொறடா சக்கரபாணி, தங்க தமிழ்ச்செல்வன் உட்பட சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த விசயத்தில் சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று கூறி, வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் அப்பீல் செய்தனர்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இரு நீதிபதிகளில் ஒரு நீதிபதி ஓய்வு பெற்றதால், வழக்கு நீண்ட காலம் நிலுவையில் இருந்தது.
இந்நிலையில், சமீபத்தில் திமுகவில் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன், 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் அப்பீல் வழக்குகளை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மனுதாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து, இந்த அப்பீல் மனு மீதான விசாரணை நாளை புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.