டில்லி

ச்சநீதிமன்றத்தில் கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி வழக்கு விசாரணை மீண்டும் ஜூலை 5 முதல் தொடங்குகிறது.

நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்ததால் மக்கள் ஒரே இடத்தில் கூட தடை விதிக்கப்பட்டது.  இதையொட்டி பல அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பணிகள் நடைபெற்றது.  அரசு அலுவலகங்களில் குறைந்த அளவிலான ஊழியர்களுடன் பணிகள் நடைபெற்றன.

அவ்வகையில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மார்ச் இறுதி முதல் நேரடி விசாரணை நிறுத்தப்பட்டது.  அனைத்து வழக்குகளும் நீதிபதிகள் காணொலி காட்சிகள் மூலமே விசாரணை நடத்தி வருகின்றனர்.  பல முக்கிய வழக்குகள் காணொலி மூலமே நடத்தப்படுகின்றன.

கொரோனா பரவல் நாடெங்கும் வெகுவாக குறைந்ததால் வழக்கறிஞர்கள் சங்கம் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியது.    ஆனால் இரண்டாம் அலை கொரோனா பரவலால் நேரடி விசாரணை நடத்துவது மேலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.  இதையொட்டி இன்று உச்சநீதிமன்றம் வரும் ஜூலை 5 ஆம் தேதி முதல் நேரடி விசாரணையை மீண்டும் தொடங்க உள்ளதாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. 

மேலும் அந்த சுற்றறிக்கையில் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்குத் தொடுப்போர் விசாரணைக்கு பிறகு தெரிவிக்க வேண்டிய புதிய தகவல்களை நேரடியாகத் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 முதல் மதியம் 12 மணி வரையும் சனிக்கிழமை அன்று காலை 10.30 முதல் 11 வரையும் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.