டில்லி

இன்று தமிழக அரசு காவிரி நீர் திறப்பு குறித்து அளிக்கப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணை செய்ய உள்ளது.

தமிழகத்துக்குக் கர்நாடக அரசு தர வேண்டிய காவிரி நீரைத் திறக்க மறுப்பதற்கு எதிராகத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் ஜி.உமாபதி, டி.குமணன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்தனர்.

வழக்கு மனுவில்

“ஏற்கனவே ஆகஸ்டு மாதத்தில் எஞ்சியுள்ள  நாள்களுக்குத் தேவையான 24 ஆயிரம் கன அடி நீரை உடனடியாக திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தவிர செப்டம்பர் மாதம் திறந்துவிட வேண்டிய 36.76 டி.எம்.சி. நீரைக் கர்நாடக அரசு திறப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்துக்கு எஞ்சியிருக்கும் காலத்துக்கு மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய நீர் குறித்த உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்யக் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.”

எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இன்று இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்மா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது.