டில்லி:
‘‘அமித்ஷா மகன் தொடர்ந்த வழக்கில் ‘தி வயர்’ மற்றும் அதன் பத்திரிக்கையாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க ஏப்ரல் 12ம் தேதி வரை உத்தரவிடக்கூடாது’’ என குஜராத் நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

2014ம் ஆண்டில் மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைந்த பின்னர் அமித்ஷா மகன் ஜெய்ஷாவின் நிறுவனத்தின் வர்த்தகம் பல மடங்கு அதிகரித்துள்ளது என்று ‘தி வயர்’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

‘‘இந்த செய்தியில் உண்மையில்லை. அதனால் தனக்கு ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். செய்தி வெளியிட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தி ஜெய்ஷா குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ‘தி வயர்’ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து ‘தி வயர்’ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசுத் ஆகியோர் அடங்கிய அமர்வு இதை விசாரித்தது. அப்போது, ‘‘வரும் ஏப்ரல் 12ம் தேதி வரை ஜெய்ஷா தக்கல் செய்த வழக்கில் செய்தி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கூடாது’’ என்று குஜராத் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இது தொடர்பாக தலைமை நீதிபதி கூறுகையில், ‘‘பத்திரிக்கைகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஒருவரை பற்றி என்ன நினைக்கிறார்களோ அதை அப்படியே எவ்வாறு எழுதலாம்?. எதற்கும் ஒரு அளவுகோள் உள்ளது’’ என்றார்.