டில்லி

முழுமையான தகவல்கள் இல்லாத பிரமாண பத்திரத்தை அளித்த மத்திய அரசுசை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

டில்லியில் கடந்த 2015ஆம் ஆண்டு 7 வயதான சிறுவன் டெங்குவால் பாதிக்கப்பட்டார்.   இந்த சிறுவனுக்கு டில்லியில் உள்ள 5 புகழ்பெற்ற மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தன.   அதன் பின் சிறுவன் மரணம் அடைந்தார்.   அதை ஒட்டி சிறுவனின் பெற்றோர் தற்கொலை செய்துக் கொண்டனர்.

உச்சநீதிமன்றம்  இந்த வழக்கை தானாக முன்வந்து எடுத்து விசாரித்தது.  விசாரணையின் போது திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாக அரசு பின்பற்றுவதில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தனர்.   மத்திய அரசுக்கு மாநில அரசுகளுடன் கலந்து பேசி இது குறித்த நடவடிக்கைகள் பற்றிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.    மேலும் இது குறித்து மாநில அளவில் ஒரு ஆலோசனை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் அது குறித்த முழு விவரங்களுடன் அந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

மத்திய அரசு சார்பில் சமீபத்தில் 845 பக்க பிரமாண பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.    அது குறித்து மத்திய அரசின் வழக்கறிஞர்கள், “எங்களுக்கு 22 மாநிலங்களில் இருந்து மட்டுமே இது குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன.   அதனால் அதை மட்டும் சமர்ப்பித்துள்ளோம் என தெரிவித்தனர்.

இதனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடும் கோபம் அடைந்தனர்.    அவர்கள் ”முழுமையான விவரங்கள் இல்லாத இந்த அறிக்கை எப்படி பிரமாண பத்திரம் ஆகும்.    எங்களை திருப்தி படுத்த அரசு ஏதாவது செய்யலாம் என எண்ணி உள்ளதா?    முழுமையான விவரங்கள் இல்லாத இந்த அறிக்கை வெறும் குப்பை தான்.   நாங்கள் குப்பை பொறுக்குபவர்கள் இல்லை.  உங்கள் குப்பையை இங்கு கொட்டவேண்டாம்”  என கடுமையாக கண்டித்தனர்.