காத்மண்டு

நேபாள நாட்டு உச்சநீதிமன்றம் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தேவ்பாவை நியமனம் செய்துள்ளது.

நேபாள நாட்டு ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியில் உட்பூசல் ஏற்பட்டது.  இதையொட்டி கே பி சர்மா ஒலி தலைமையில் இயங்கி வந்த அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.  கடந்த மே மாதம் நேபாள நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கே பி சர்மா ஒலி தோல்வி அடைந்தார்.

அப்போது எதிர்க்கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாத நிலை உண்டானதால் அந்நாடு அதிபர் மீண்டும் கே பி சர்மா ஒலியைப் பிரதமராக நியமித்தர்.  அப்போதும் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.  ஆகவே நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு முன் கூட்டியே தேரஹ்டல் நடத்த அவர் பரிந்துரைத்தார்.  அதை அதிபர் பித்யா தேவி பண்டாரி ஏற்றுக் கொண்டார்.

அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு வரும் நவம்பர் 12 மற்றும் 19 தேர்தல்களில் தேர்தல் நடத்த உத்தரவிட்டார்.  இந்நிலையில் 61 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தேவ்பா தனது கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.  ஆனால் அதை அதிபர் ஏற்க மறுத்தார்.

இதை எதிர்த்து நேபாள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.    ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில், “நேபாளத்தில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் நிலை நிறுத்த வேண்டும்.  மேலும் நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தேவ்பா பிரதமர் பொறுப்பு ஏற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.