விண்வெளிக்கு சென்று திரும்பும் தனது 20 ஆண்டு கனவை பூர்த்தி செய்தார் விர்ஜின் குழுமத்தின் தலைவரும் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமான 70 வயதே ஆன ரிச்சர்ட் பிரான்சன்.

ரிச்சர்ட் பிரான்சன்

நேற்றிரவு விர்ஜின் காலக்டிக் விண்வெளி ஓடம் மூலம் விண்ணுக்குச் சென்ற பிரான்சன், பூமியில் இருந்து சுமார் 85 கிலோமீட்டர் உயரத்திற்குச் சென்று அங்கிருந்து பூமிப் பந்தின் அழகை ரசித்தார்.

விண்வெளி ஓடத்தினுள் உடல் எடையில்லாமல் மிதப்பது போல் உணர்ந்த பிரான்சன் சில நிமிட நேரம் கழித்து பூமிக்கு திரும்ப ஆரம்பித்தார்.

ஒரு மணி நேரம் நீடித்த இந்த விண்வெளிப் பயணத்திற்குப் பின் தனது நீண்டநாள் கனவு நிறைவேறியதாகக் கூறினார்.

விர்ஜின் நிறுவனம் வணிக நோக்கில் பொதுமக்களை விண்வெளிக்கு அனுப்பி திரும்ப அழைத்து வரும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருக்கிறது, இந்த ஒரு மணி நேர பயணத்திற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1.9 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது.

ஜெப் பெசோஸ்

இந்நிலையில், விண்வெளிக்குச் செல்ல உலகின் முதல் நிலை கோடீஸ்வரரான அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் முயற்சித்து வருகிறார்.

ப்ளூ ஆரிஜின் என்ற ராக்கெட் மூலம் இந்த மாதம் 20 ம் தேதி பயணம் மேற்கொள்ள இருக்கும் பெசோஸ், பூமியில் இருந்து 100 கி.மீ உயரத்தில் பறக்க இருக்கிறார்.

இதுகுறித்து ப்ளூ ஒரிஜின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சர்வதேச அளவில் விண்வெளி என்பது 100 கி.மீ. உயரத்தில் இருந்து தான் ஆரம்பமாகிறது என்றும் 85 கி.மீ. என்பது அமெரிக்கா நிர்ணயித்திருக்கும் அளவு தான் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிரான்சன் சென்ற ‘காலக்டிக்’ ஓடம் அதிக உயரம் சென்றுத் திரும்பக்கூடிய விமான வகையைச் சார்ந்தது, பெசோஸ் செல்ல இருக்கும் ‘ப்ளூ ஒரிஜின்’ ராக்கெட் வகையைச் சார்ந்தது என்று வணிக ரீதியாக விண்வெளிக்கு பொதுமக்களை அனுப்பிவைக்க இரு பெரும் பணக்காரர்களும் மல்லுக்கட்டி நிற்கின்றனர்.

ஜூலை 20 ம் தேதி விண்ணில் பாய இருக்கும் ப்ளூ ஆரிஜின் ராக்கெட்டின் பைலட்டாக ஜெப் பெசோஸ் இருக்கப்போகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.