சினிமா விமர்சனம்:சாயம்
சாதாரண பிரச்சினையை, சாதி வெறியர்கள் எப்படி திசை திருப்பி, விவகாரம் ஆக்குகிறார்கள் என்பதை அதிரடியாக கூறும் படம் இது.
ஊரில் பெரிய மனிதர் பொன்வண்ணன், இவரது நண்பர் ஆசிரியர் இளவரசு. வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இவர்கள் இணைந்து செயல்பட்டு, ஊருக்கு நல்லது செய்கிறார்கள். இவர்களது மகன்களும் நண்பர்கள். கல்லூரியில் ஒன்றாக படிக்கிறார்கள்.
சாதி வெறியர் ஒருவர், இந்த நண்பர்களுக்குள் பிரச்சினையை ஏற்படுத்துகிறார். அதில் ஒருவர் கொல்லப்படுகிறார்.
பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
பெரியவராக வரும் பொன்வண்ணன் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகன் மீதான அன்பை கண்டிப்பில் காட்டும் காட்சிகள் கூடுதல் சிறப்பு. ஆசிரியராக இளவரசுவும் சிறப்பான நடிப்பை அளித்திருக்கிறார். அவரது சாதியைச் சொல்லி இழிவுபடுத்த நினப்பவருக்கு, வார்த்தைகளாலேயே சவுக்கடி தரும் காட்சி சிறப்பு.
பொன்வண்ணன் மகனாக அபி சரவணன் வருகிறார். வழக்கம் போல பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார். நண்பனிடம் காட்டும் நேசம், பிறகு அவன் தனக்கு துரோகம் செய்ததாக நினைத்து ஆத்திரப்படுவது, முறைப்பெண்ணை மறுப்பது, அதே பெண்ணை நண்பன் காதலிக்கிறானோ என்றதும் ஆவேசப்படுவது என சிறப்பான நடிப்பு.
ஆரம்பத்தில் சாந்தமாக வரும் அபி சரவணன், பிறகு தாதா ஆகும் காட்சிகளில் மிரட்டுகிறார்.
அவரதுஉறவினராக தென்னவன், தென்னவன் மகளாக ஷைனி.
இவர்களோடு, அதிக வட்டிக்கு பணத்தைக் கொடுத்து வாழ்ந்து வரும் சாதி வெறியர் ஆன்டனி சாமி. என அனைவருமே இயல்பாக நடித்துள்ளனர்.
இசை.. நாகா உதயன். ஒளிப்பதிவு கிறிஸ்டோபர் – சலீம். இரண்டுமே படத்துக்கு பக்கபலமாக உள்ளது.
இயக்குநர் ஆன்டனி சாமி, சாதி வெறியர்களுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறார்.