னாமா

சௌதி அரேபியா குடி மக்கள் வெளிநாட்டினரை மணந்துக் கொள்ள பல புதிய விதிகளை சௌதி அரசு அறிவித்துள்ளது.

சௌதி அரேபிய ஆண்களும் பெண்களும் வெளிநாட்டினரை திருமணம் செய்துக் கொள்வது நெடுங்காலமாக உள்ளது.   இதற்கு வரதட்சனை, திருமணத்துக்கான செலவுகள், வருமானம் குறைவாக உள்ளது போன்ற காரணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.   இவ்வாறு திருமணம் செய்துக் கொள்ள சௌதி அரேபிய அரசு பல சட்ட விதிகளை அமுல் படுத்தி இருந்தது.

தற்போது அந்த விதிகளில் பல திருத்தங்களை செய்து அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.  அதன் விவரங்கள் பின் வருமாறு :

புதிய விதிகளின் படி மணமக்களுக்கு இடையே அதிகபட்சமாக 15 வருட இடைவெளி மட்டுமே இருக்க வேண்டும்.   இதற்கு முன்பு 30 வருட இடைவெளி அனுமதிக்கப்பட்டிருந்தது.   அத்துடன் வெளிநாட்டினரை மணம் செய்ய விரும்பும் சௌதி அரேபிய பெண் 50 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.   முந்தைய விதியின் படி 55 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.    வெளிநாட்டினரை மணம் புரிய எண்ணும் சௌதி ஆண்கள் 40 முதல் 65 வயதுக்குள்ளும்  சௌதி பெண்கள் 30 முதல் 50 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

திருமணம் செய்துக் கொள்ளும் சௌதி ஆண் தங்களின் வெளிநாட்டு மனைவிக்கு மாதம் 3000 சௌதி ரியாலை வழங்கும் அளவுக்கும், அந்தப் பெண் வசிக்க ஒரு தனி வீடு அல்லது ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு வழங்கும் அளவுக்கு வசதி பெற்றிருக்க வேண்டும்.    எந்த ஒரு கொடிய நோயும் தனக்கு இல்லை என சான்றிதழ் வழங்க வேண்டும்.   நாட்டின் ராணுவத்தில் எந்த ஒரு பதவியிலும் இருக்கக் கூடாது.    மேலும் தன்னை திருமணம் செய்துக் கொண்டதால் தனது மனவிக்கு குடியுரிமை கோரி விண்ணப்பிக்கக் கூடாது.

வெளிநாட்டினரை திருமணம் செய்துக் கொள்ளும் சௌதி பெண்கள் தங்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கு சௌதி குடியுரிமை திருமண பந்தத்தினால் கோர மாட்டோம் என உறுதி அளிக்க வேண்டும்.    பெண்களுக்கும் எந்த ஒரு கொடிய நோயும் இல்லை என சான்றிதழ் வழங்க வேண்டும்.

இது போன்ற விதிகள் புதிதாக விதிக்கப்பட்டுள்ளன.