சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா, இன்று தமிழகம் வர இருப்பதாகவும், வந்தால் கைது செய்யப்படுவார் என்றும் தகவல் பரவியிருக்கிறது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்ததை அடுத்து, அக் கட்சியின் ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
download
இதையடுத்து அவர் மீது பலரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி, காவல்துறையில் புகார் அளித்தனர்.  இதில் அவரது வீட்டில் பணிபுரிந்து வந்த பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர், மகன் ஆகியோர் மீது பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்தனர்.
இந்த புகார் குறித்த விசாரணை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது வெளியூரில் இருந்தபடி போலியான நபர்களை வைத்து கையெழுத்திட்டுள்ளதாக சசிகலா புஷ்பா மீது புகிய புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் உலவுகின்றன.
இந்த சூழ்நிலையில், முன்னாள் மத்திய இணையமைச்சர் ராதிகா செல்வியின் கணவரும், தூத்துக்குடி மாவட்ட பிரபல பிரமுகருமான மறைந்த வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது.  இதில் கலந்துகொள்ள சசிகலா புஷ்பா, தமிழகம் வர இருப்பதாக தகவல் பரவியுள்ளது.
அப்படி வந்தால், அவர் கைது செய்யப்படுவார் என்றும் சொல்லப்படுகிறது. இது அரசியல்வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.